திமுக அரசு உடனடியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!
கனிம வளக் கடத்தலை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அண்ணாமலை
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "தென்காசி மாவட்டத்தில், தனியார் பேருந்தின் மீது, கனிம வளங்களைக் கொண்டு செல்லும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில்,
குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
வலியுறுத்தல்
குமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் இருந்து, கேரள மாநிலத்துக்குக் கனிம வளங்கள், அனுமதி பெறாமலும், அனுமதிக்கப்பட்டதை விட மிக அதிக அளவிலும் கடத்தப்பட்டு வருவது தொடர்கதை ஆகியிருக்கிறது.
இதனால், பொதுமக்கள் இன்னலுக்குள்ளாவதோடு, சாலைகளும் பெருமளவில் பாதிப்படைகின்றன. விபத்தை ஏற்படுத்திய இந்த லாரி குறித்த விசாரணை உரிய முறையில் நடைபெற வேண்டும் என்றும், அனுமதி இல்லாமல் தென்மாவட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கனிம வளக் கடத்தலை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.