‘’மிஸ்டர் அண்ணாமலை கொஞ்சம் உங்க முதுகையும் பாருங்க ‘’ - பதிலடி கொடுத்த தயாநிதிமாறன்
பாஜகவின் தீவிர ஆதரவாளரான யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருப்பது அக்கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு வேறு வழக்கில் கைதாகியுள்ள மாரிதாஸை குண்டாஸில் அடைக்கவும் காவல் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே பாஜக ஆதரவாளர்கள் கிஷோர் கே சாமி, கல்யாணராமன் குண்டாஸில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாஜகவினரை குறிவைத்து திமுக அரசு குண்டாஸில் அடைப்பதாகவும், தமிழ்நாட்டில் குண்டாஸ் கலாச்சாரம் அதிகரித்து வருவதாகவும் அக்கட்சி தலைவர்கள் விமர்சிக்கின்றனர்.
குறிப்பாக மாநில தலைவர் அண்ணாமலை, டிஜிபி சைலேந்திரபாபு அரசின் கைப்பாவையாக செயல்படுவதாகவும், நடுநிலையுடன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கொந்தளித்தார்.
திமுக மாவட்ட செயலாளர்களும், அக்கட்சியின் சமூக வலைதள பிரிவினரும் தான் காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் கூறினார். மேலும் 17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பாஜக நினைத்தால் திமுகவை இல்லாமல் ஆக்கிவிடுவோம் எனவும் எச்சரித்தார்.
அதன் தொடர்ச்சியாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அரசு மீது புகார் பட்டியலையும் அளித்தார். இந்த நிலையில் ,திமுக எம்பி தயாநிதி மாறனும் அமைச்சர் சேகர்பாபுவும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது இதுதொடர்பாக கேள்விகளுக்கு பதிலளித்த திமுக எம்பி தயாநிதி மாறன் :
பாஜக ஆளும் கர்நாடகாவில் அரசை எதிர்த்து கேள்வி கேட்டாலே கைது செய்கிறார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை என கூறிய தயாநிதி மாறன். மக்களிடையே மோதலை உருவாக்கும் நோக்கில் செயல்படுவதால் கைது செய்யப்படுகிறார்கள்.
மத்தியப் பிரதேசத்திலும் பிபின் ராவத் மறைவு குறித்து கருத்து தெரிவித்ததாக அங்கு ஆளும் பாஜக அரசு கைது செய்துள்ளது. அதற்கெல்லாம் என்ன பதில் வைத்துள்ளார் அண்ணாமலை?
அதேபோல 17 மாநிலங்களில் ஆட்சியில் இருப்பதாகக் கூறுகிறார்கள். மற்ற கட்சி எம்எல்ஏக்களை சிபிஐ, ஐடி, அமலாக்கத் துறை மூலம் மிரட்டி ஆட்சியைப் பிடித்தவர்கள் அவர்கள். காலையில் எழுந்தவுடன் என்ன குறை சொல்லலாம் என யோசிப்பவர் அண்ணாமலை.
அதனால் தான் அனைத்திலும் குறையாக பேசி கொண்டிருக்கிறார். பிறரை குறை கூறும் முன் அவர் தன்னுடைய முதுகையும் திரும்பி பார்க்க வேண்டும் என்றார்.