மதத்தின் மீது இருக்கும் பற்று..குறை கூறக்கூடாது- ஐஐடி இயக்குநருக்கு அண்ணாமலை ஆதரவு!
பசுமாட்டின் மீது நம்பிக்கை இருப்பது தவறு கிடையாது, அது அவருடைய கோட்பாடு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
ஐஐடி இயக்குநர்
மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி ஒருமுறை எனது தந்தை ஜுரம் அடிப்பதால் மருத்துவரிடம் செல்லலாமா என ஒரு சந்நியாசியிடம் கேட்டார். அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டுக் கோமியம் குடி எனக் கூறினாராம்.
உடனடியாக அவர் கோமியத்தைப் பருகவும் அடுத்த 15 நிமிடத்தில் ஜூரம் குணமாகி விட்டது. காய்ச்சல், வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்குக் கோமியம் சிறந்த மருந்து எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:
நம்பிக்கை
சென்னை ஐஐடி இயக்குநராக உள்ள காமகோடி பெரிய நிபுணராவார். அவருக்கு அவருடைய மதத்தின் மீது பற்று இருக்கிறது. அதில் தவறு கிடையாது. மார்கழி மாதத்தில் பாராயணம் பாடுவது தவறு கிடையாது. அதுபோல பசுமாட்டின் மீது நம்பிக்கை இருப்பது தவறு கிடையாது, அது அவருடைய கோட்பாடு என்று கூற வேண்டும்.
மேலும் அவர் வகுப்பறைக்குள் சென்று பாடம் எடுத்து நீங்க குடிங்க என்று சொல்வது கிடையாது, அவருடைய தனிப்பட்ட நிலைப்பாடு பற்றிக் குறை கூறக்கூடாது.இதனை அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியலாக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.