புதிய இயக்கம் தொடங்கிய அண்ணாமலை; மோடிக்கு வாழ்த்து பதிவு
பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடி 4,399 நாட்கள் பிரதமராகப் பதவி வகித்துள்ளதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவரான அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகிய பின்னர் புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பை கடந்த 5ஆம் தேதி வெளியிட்ட அவர், தனது இயக்கத்தில் இணைய விரும்புவோருக்கான பதிவு இணைப்பையும் பகிர்ந்திருந்தார். அந்த இணைப்பின் மூலம் பல லட்சம் பேர் இயக்கத்தில் இணைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
புதிய இயக்கம் தொடர்பான அறிவிப்புக்கு முன்னதாக, பாஜக தேசியத் தலைவர் நிதின் கட்கரி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அண்ணாமலை சந்தித்திருந்தார். இதையடுத்து டெல்லியில் இருந்து நேரலை வாயிலாக தனது புதிய அரசியல் இயக்கத்தை அவர் அறிவித்தார்.
அண்ணாமலையின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் விமர்சித்து, அது பாஜகவின் மாற்று வடிவமே எனக் குற்றம்சாட்டி வருகின்றன.
இதற்கிடையில், தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகளும் அண்ணாமலையின் இயக்கத்தில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்று தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் இருந்து, இன்று 4,399 நாட்களை நிறைவு செய்துள்ளார். இதன் மூலம், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நீண்டகால பிரதமர் பதவி சாதனையை அவர்
கடந்துள்ளார். இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அண்ணாமலை பதிவு
அந்த வகையில், புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள அண்ணாமலையும் தனது எக்ஸ் (X) தளப் பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், “இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் பதவியில் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக இன்று 4,399 நாட்களை நிறைவு செய்துள்ள நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
நாட்டிற்கான தனது சேவையைத் தொடர்ந்து மேற்கொள்ள, எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அளப்பரிய வலிமையையும் நல்வாழ்வையும் அருளட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.