ஈரோடு இடைத்தேர்தல்; வாக்காளர்களுக்கு 2 கிலோ கறி, 5 ஆயிரம் பணப்பட்டுவாடா - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
திமுகவினர் கடந்த வாரம் வாக்காளர்களுக்கு 2 கிலோ இறைச்சியை வழங்கியதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையத்திற்கு அண்ணாமலை புகார் கடிதம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் புகார் தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற திமுக அமைச்சர்கள் , திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது தொடர்பான திமுக அமைச்சர் கே.என்.நேருவும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் உரையாடியது தொடர்பான ஆடியோவை கடந்த மாதம் 29ஆம் தேதி பாஜக வெளியிட்டதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வாக்காளர்களுக்கு 2 கிலோ இறைச்சியை திமுகவினர் அளித்ததாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ரூ.1000 முதல் 5000 வரை பணபட்டுவாடா செய்யப்படுவதாக கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தொடர்ந்து புகார்கள் அளித்தும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டிள்ளார்.
ஆளும் திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சாடியுள்ளார். எனவே ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரை அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.