பெரியார் சிலையை ஒருபோதும் அகற்ற முடியாது..!! அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலடி!!
திருச்சி ஸ்ரீரங்கத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெரியார் சிலை குறித்து பேசிய கருத்துக்கள் கடும் விமர்சனங்களை பெற்று வருகின்றது.
அண்ணாமலை கருத்து
திருச்சி மாவட்ட ஸ்ரீரங்கத்தில் என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக ஆட்சிக்கு வந்ததும், ஸ்ரீரங்க கோவிலுக்கு வெளியே இறைவனை நம்புகிறவன் முட்டாள் என்ற வாசகம் பொருந்திய வாசகத்தை முதலில் நீக்குவோம் என அதிரடியாக கருத்தை தெரிவித்தார்.
இந்த கருத்து பெரும் சர்ச்சையான நிலையில், அது குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
புதிய விளக்கம்
இந்நிலையில், இது குறித்து அண்ணாமலை விளக்கம் ஒன்றையும் பிறகு அளித்தார். திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தமது நடைப்பயணத்தை மேற்கொண்டார். காந்தி மார்க்கெட்டில் தமது மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை நிறைவுசெய்த அவர், அங்கு பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, ''திமுக காரர்கள் கேட்கிறார்கள் அந்த சிலையையும் வாசகத்தையும் எங்கே கொண்டுபோய் வைப்பீர்கள் என்று, சிலையை உடைக்கும் அளவுக்கு இங்கு யாரும் கேவலமானவர்கள் கிடையாது. சிலையாக இருந்தாலும் சரி வாசகமாக இருந்தாலும் சரி பொது இடத்தில் எங்கே இருக்க வேண்டுமோ அங்கு வைப்போம். எல்லா சிலைகளும் பொது இடத்தில் வைப்போம்'' என்றார்.
திருமாவளவன் பதிலடி
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும் போது, வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொல்லப்படும் நிலையில், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட வெண்டும் என கேட்டுக்கொண்டு, தமிழ்நாட்டில் பாஜக, ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துகிறது. அவர்களால் கெட்டுப்போகாத சட்டம் ஒழுங்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் கெட்டுப் போகுமா? என வினவினார்.
எனவே மாநாடுக்கு அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், தமிழகத்தில் பாஜக கட்சியின் கூட்டங்களுக்கு ஒரு சதவீதம் கூட ஆட்கள் வருவதில்லை அதுதான் யதார்த்தமான உண்மை என சுட்டிக்காட்டி, பாஜகவினர் கூட்டணி கட்சியிடமும், சாதி அமைப்பினரும் ஆள் பிடிக்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், பெரியார் சிலை அகற்றப்படும் என அண்ணாமலை கூறியது, மணலை கயிறாக திரிப்போம், வானத்தை வில்லாக வளைப்போம் போன்ற கூற்றைப் போல் இருக்கிறது என விமர்சித்து, அவரால் பெரியார் சிலை அகற்றவும் முடியாது, மணலை கயிறாக திரிக்கவும் முடியாது என காட்டமாக பதிலடி கொடுத்தார்.
இது பரபரப்புக்காக பேசும் பேச்சாகும் என விமர்சித்த திருமாவளவன், தமிழகத்தில் இதெல்லாம் எடுபடாது என தெரியும் எனக்கூறி, நாடாளுமன்ற தேர்தல் வரை இவரது பேச்சை கேட்டுதான் ஆக வேண்டும் என்றும் அதன் பிறகு அக்கட்சியில் யாரும் இருக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.