போராட்டத்துக்கு தள்ள வேண்டாம்.. நியாமான கோரிக்கையை நிறைவேற்றுக - அண்ணாமலை!
போக்குவரத்து துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலை
இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, கடந்த எட்டரை வருடங்களாக, அதாவது 102 மாதங்களாக, அகவிலைப்படி உயர்வு வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.
மேலும், கடந்த 18 மாதங்களாக, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு, ஓய்வுக் காலப் பணப் பலனையும் வழங்காமல் இருப்பதாகத் தெரிகிறது.கடந்த 8 ஆண்டுகளில், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், சுமார் 93,000 தொழிலாளர்கள் உள்ளனர்.
இவர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமலும், ஓய்வூதியத்தை முறைப்படுத்தாமலும், வயது முதிர்ந்த காலத்தில், மிகக் குறைந்த அளவில் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். பல முறை தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தும், கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்நீதிமன்றமே,
நியாமான கோரிக்கை
அகவிலைப்படி உயர்வு வழங்கக் கூறி தீர்ப்பளித்த பின்னரும், திமுக அரசு, இதுவரை ஓய்வு பெற்றோருக்கான அகவிலைப்படி உயர்வை வழங்காமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இது தொடர்பாக, ஓய்வூதியதாரர்கள் பலமுறை அரசின் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும், வேறு வழியின்றி, பொங்கல் பண்டிகை நேரத்தில், போக்குவரத்துத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பதும், அந்த நேரத்தில் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து அவர்களைச் சமாதானப்படுத்தி, பின்னர் அவர்கள் கோரிக்கைகளைக் கிடப்பில் போடுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதனால், பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றார்கள். எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ஓய்வு பெற்றவர்களை அலைக்கழிப்பதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. திமுக அரசு உண்மையில் எதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது?
போராட்டம்
அரசுத் துறைகளில் பல ஆண்டுகள் சேவை செய்து ஓய்வு பெற்றவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நிதி ஒதுக்காமல், கார் பந்தயம் போன்ற அனாவசியச் செலவுகளுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கிக் கொண்டிருக்கிறது. பொதுமக்களின் வரிப்பணம், பொதுமக்களுக்கான சேவைகளுக்கே தவிர,
திமுகவினர் கேளிக்கைகளுக்கு அல்ல. உடனடியாக, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் நியாயமான கோரிக்கைகளான, ஓய்வூதியத்தை முறைப்படுத்தி, கடந்த 102 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வு, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு,
கடந்த 18 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் ஓய்வுக்கால பணப்பலன் ஆகியவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். பொங்கல் பண்டிகை வரை இழுத்தடித்து, மீண்டும் வழக்கம்போல போராட்டத்தில் ஈடுபடும் சூழலுக்குப் போக்குவரத்துத் துறை ஊழியர்களைத் தள்ள வேண்டாம் என்றும் எச்சரித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.