அப்படி பாத்தா முக ஸ்டாலினும் குற்றவாளி தான் - அண்ணாமலை அதிரடி
ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் ஒருவருக்கு ஊதியம் வழங்கும் முதல்வர் முக ஸ்டாலினும் குற்றவாளி தான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை நடைபயணம்
நடைபயணம் மேற்கொண்டு வரும் அண்ணாமலை, மதுரை தெற்கு மற்றும் மத்தி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் பேசிய அண்ணாமலை,கர்நாடகாவில் பாஜக இருந்தவரையில் எழாமல் இருந்த காவிரி நீர் பிரச்சனை தற்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு எழுந்து விட்டதாக குற்றம்சாட்டினார்.
ஸ்டாலினும் குற்றவாளி தான்
மேலும், தமிழை வளர்ப்பதற்காக திமுக எதுவும் செய்யாத காரணத்தால் தான் நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 54 ஆயிரம் மாணவர்கள் தோல்வியடைந்ததாக குற்றம்சாட்டி, ஆனால் 81 கோடி ரூபாய்க்கு பேனா சிலை அமைத்து வருகிறார்களா என சாடினார்.
சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முதல்வர் மக்கள் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் அளிப்பதால் அவரும் குற்றவாளி என கூறி, இது வரையில் தமிழகம் பெற்றுள்ள கடனை அடைப்பதற்கே 27 ஆண்டுகள் ஆகும் என்றும் மக்களிடம் ஆவேசமாக கருத்து தெரிவித்தார்.
உதயநிதிக்கு அரசியல் புரிதல் இல்லை
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழை வளர்க்க அமித் ஷாவும், பிரதமர் மோடியும் செய்து வரும் செய்லகளை குறிப்பிட்டு, ஆனால் முதல்வர் முக ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கு ஆக்கபூர்வமாக பேச தெரியாது என குறை கூறினார்.
அவர் இருவரும் அரசியல் புரிதல் இல்லாதவர்கள் என குறிப்பிட்டு, இன்னும் எத்தனை முறை கேட்டாலும், செல்லூர் ராஜுவின் கருத்திற்கு பதில்கூறி தன்னுடைய தரத்தை குறைத்து கொள்ள விரும்பவில்லை என அண்ணாமலை கூறினார்.