2024-ஆம் ஆண்டிற்கு பிறகு நாம் தமிழர் கட்சியே இருக்காது...அண்ணாமலை
தங்கள் கட்சியுடன் போட்டி போட தயாரா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சாவல் விடுத்த நிலையில், அதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல்
நாட்டில் ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்தான முதற்கட்ட நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு இது குறித்து ஆய்வுகளை நடத்தப்படவுள்ளன.
இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரே நாடு ஒரு தேர்தல் குறித்து விளக்கமளித்து, பின்னர் இந்த கொள்கைக்கு தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் த.மா.கா. கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியே இருக்காது
அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், தங்கள் கட்சியை விட ஒரு வாக்கு அதிகம் வாங்கிட முடியுமா என அண்ணாமலையிடம் சவால் விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, நாம் தமிழரை கட்சியை விட 30 சதவீதம் அதிக வாக்குகள் பெற முடியும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வரும் 2024-ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியே இருக்காது என அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.மேலும், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பை விடவும், அதிக இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிலேயே மத்திய அரசிடம் இருந்து அதிக நிதியை பெற்ற மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் நிலையில், அதனை மும்பையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் மறைத்திருக்கிறார் என்பது கண்டனத்துக்கு உரியது என கூறினார்.