பெட்ரோல், கேஸ் விலை உயர்வால் மக்கள் பாஜகவை வெறுக்க மாட்டார்கள் - அண்ணாமலை நம்பிக்கை
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. அரசியல் கட்சிகள் தற்போது கூட்டணி, தொகுதி பங்கீடுகளை முடித்துள்ளன. கூட்டணி கட்சிகள் எந்நெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பது இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்படும். இதனால் அரசியல் கட்சிகளும் தங்களுக்கு சாதகமான தொகுதியை பெற்று விட வேண்டும் என்கிற முனைப்பில் இருந்து வருகின்றன.
அதற்கான வேலைகளையும் களத்தில் ஆரம்பித்துவிட்டன. அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் என உத்தேசமான பட்டியல் ஒன்று இணையத்தில் உலவி வருகிறது. அதில் குஷ்பூ, அண்ணாமலை உள்ளிட்டோர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை, “ஒரே தொகுதியை கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்பது என்பது வழக்கமானது தான். எங்களுக்கு வழங்கப்படும் 20 தொகுதிகளும் வெற்றி தொகுதிகள் தான். பாஜக வேட்பாளர் 20 தொகுதிகளிலும் வெற்றிபெறுவார்கள். பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் விலையுயர்வால் பாஜக மீது தமிழக மக்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறுகிறார்கள்.
இதெல்லாம் சின்ன சின்ன பிரச்னைகள் . பெட்ரோல் ,டீசல் ,கேஸ் விலை உயர்வால் மக்கள் அதிமுக – பாஜக கூட்டணியை வெறுக்க மாட்டார்கள்.
பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறையும்.வீடு இல்லாதவர்களுக்கு வீடு, கேஸ் அடுப்பு உள்ளிட்ட பல நலத்திட்டங்களை அரசு கொடுத்துள்ளது. தேர்தலுக்காக கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கும் கட்சி பாஜக இல்லை ” என்று கூறினார்.