இளைஞர்கள்தான் வளர்ச்சியின் இன்ஜின்கள்..அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரை
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. 70 ஆண்டுகளுக்குப் பின் பிரதமர் மோடி பங்கேற்று உரை ஆற்றினார்.
பட்டமளிப்பு விழா
ஆசியாவிலேயே பழமையான கல்வி நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம். சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி கடந்த 1794-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இங்கு பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அவை தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
பிரதமர் மோடி
பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக்கழகமான இதன் கீழ் வரும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளைப் படித்து வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் பாதிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் கற்பித்தல் பணிகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது நிலை சீராகி வருகிறது.
பிரதமர் கையால் பட்டம்
எனினும் நீண்ட காலமாக 2021ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி தேதி கொடுத்த பின்னர், அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
அதன்படி தற்போது நடக்கும் பட்டமளிப்பு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடி மாணவர்களுக்கு பட்டமளித்து உரை ஆற்றினார்.
இந்தியா முதலிடம்
அதில், அனைவருக்கும் வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கினார். பட்டம் பெறும் மாணவர்கள், பெற்றோர்களுக்கு வாழ்த்துகளையும். கனவை நனவாக்கும் ஆசிரியர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தார். அண்னா பல்கலைக் கழகத்தில் கலாம் தங்கியிருந்த அறை நினைவகமாக மாற்றப்பட்டுள்ளது.
இளைஞர்கள்தான் வளர்ச்சியின் இன்ஜின்கள், உலகத்தின் வளர்ச்சி இன்ஜின் இந்தியா. உலகளவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியா முதலிடம். கடந்தாண்டு வளர்ச்சி சாதனையாக 83 பில்லியன் டாலர் முதலீடுகளை இந்தியா ஈர்த்துள்ளது.
வலிமையான அரசாங்கம் என்பது கட்டுப்பாடுகளை விதிப்பது அல்ல. வலிமையான அரசாங்கம் என்பது வழிகாட்டுதல்களை ஏற்படுத்தி மக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதாகும் என்றார்.