அண்ணா பல்கலை திடீர் அறிவிப்பு; மாணவர்கள் அதிர்ச்சி!

Shocked Announcement Students Anna University
By Thahir Jan 07, 2022 11:11 AM GMT
Report

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள திடீர் அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரியில் நடத்தப்படும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை அண்ணா பல்கலை கழகத்தால் டான்செட் எனப்படும் நுழைவுத்தேர்வு மூலம் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது.

அந்தவகையில் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் நடத்தப்பட்டு வந்த 6 முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2009 ம் ஆண்டு 10 முதுநிலை பொறியியல் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு பொறியியல் பாடப் பிரிவிலும் 25 மாணவர்கள் வீதம் ஆண்டுக்கு 250 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வந்தது.

இதில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 4 முதுநிலை பொறியியல் பாடப்பிரிவுகள் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள 6 முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை அண்ணா பல்கலை கழகத்தால் இந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்காக தமிழக அரசு பல கோடி ரூபாய் செலவில் ஆய்வகங்கள் மற்றும் வகுப்பறைகள் கட்டி பயன்பாட்டில் உள்ள நிலையில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளதால் அரசு பணம் பல கோடி வீணாக கூடிய நிலை உள்ளது.

இந்த வளாகத்தில் தற்போது நடத்தப்பட்டு வந்த ஆறு முதுநிலை படிப்புகள் ஏரோநாட்டிகல் பொறியியல், பயன்பாட்டு பொறியியல், மின்னணுவியல் பொறியியல், கட்டமைப்புப் பொறியியல், தொலை உணர்வு பொறியியல், சுற்றுச்சூழல் பொறியியல் ஆகிய படிப்புகள் தென் தமிழ்நாட்டில் வேறு எந்த அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் கல்வி நிறுவனங்களில் பணிபுரிய விரும்பும் மாணவர்களுக்கு இந்த படிப்புகள் ஒரு வரப்பிரசாதமாக கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், மாணவர் சேர்க்கை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தென் மாவட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.