மே 24 முதல் பொறியியல் மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்... அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மே 24 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வானது கொரோனா தொற்றின் காரணமாக கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களில் ஆன்லைனில் நடைபெற்றது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதால் மறு தேர்வு நடத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி மறுதேர்வு குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. முந்தைய நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு எழுத விண்ணப்பிக்காத மாணவர்கள் மட்டும் மறுதேர்வு எழுத வரும் 24-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், ஏற்கனவே தேர்வுக்கு விண்ணப்பித்தும், கட்டணம் செலுத்தியும் இருந்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விரைவில் தேர்வுக்கான கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.