அண்ணா பல்கலைக்கழக வழக்கு; நீதிமன்றத்தில் கதறி அழுத ஞானசேகரன் - என்ன தண்டனை?
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை வழக்கு
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தில், மாணவியை மிரட்டும்போது செல்போனில் ஒருவரிடம் சார் என்று கூறி ஞானசேகரன் பேசியதாக, மாணவி வாக்குமூலம் அளித்திருந்தார்.
இதன் காரணமாக, இந்த வழக்கில் இன்னொரு நபருக்கு தொடர்பு இருப்பதாக கருதி, யார் அந்த சார் என கேட்டு எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்தன.
இந்த வழக்கை விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றம் 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது.
குற்றவாளி என தீர்ப்பு
வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று, ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளுக்கு நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி என அறிவிக்கப்பட்டததும் ஞானசேகரன் கதறி அழுதுள்ளார். தனக்கு மகள் உள்ளார். குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
அரசு தரப்பில் அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தண்டனை விவரம் ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.