விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கும் அண்ணா ஹசாரே
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரேவும் நாளை(ஜன., 30) போராட்டம் நடத்துகிறார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியில் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்படவில்லை. இந்நிலையில் கடந்த 26-ம் தேதி நடைபெற்ற விவசாயிகளின் ட்ராக்டர் பேரணியில் போலீசார் தடியடி நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லி எல்லையில் மர்மகும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து டெல்லி போலீஸ் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே(84) நாளை(ஜன., 30) காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான அகமதுநகரில் இந்த போராட்டத்தை தொடங்குகிறார். தனது ஆதரவாளர்களையும், தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்தபடியே போராட்டங்களைத் தொடங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அவர், கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்திப் பல்வேறு கட்ட போராட்டங்களைத் தொடர்ச்சியாக செய்து வந்துள்ளேன். அப்படி இருந்தும் விவசாயிகள் விவகாரத்தில் அரசு, சரியான முடிவை எடுக்கவில்லை விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாயக்க மறுக்கிறது.
கடந்த மூன்று மாதங்களில் பிரதமர் மற்றும் வேளாண் துறை அமைச்சருக்கு 5 முறை கடிதம் எழுதி உள்ளேன். அதுப்பற்றி அரசு விவாதிக்கிறதே தவிர எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. ஆகவே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார் அன்னா ஹசாரே.