திருமலையில் அவதரித்த ஆஞ்சநேயர்! வெளியான ஆதாரங்கள்
திருமலை என்று கூறப்படும் அஞ்சனாத்ரி மலையில் தான் ஆஞ்சநேயர் அவதரித்தார் என புராணங்கள், கிரந்தங்கள், சாசனங்கள் ஆகிய ஆதாரங்களின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பகவான் ஸ்ரீ ராமரின் முதன்மை பக்தரான ஆஞ்சநேயர் தற்போது திருமலை என்று கூறப்படும் அஞ்சனாத்ரி மலையில்தான் அவதரித்தார் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அமைத்த பண்டிதர்கள் அடங்கிய குழு பல்வேறு புராணங்கள், நூல்கள் மற்றும் ஆதாரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து தேவஸ்தானத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீராம நவமி தினமான இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் ஏழுமலையான் கோவில் எதிரே ஆஞ்சநேயர் தற்போது திருமலை என்று கூறப்படும் அஞ்சனாத்திரி மலையில் தான் அவதரித்தார் என்று புராணங்கள், நூல்கள் ஆகியவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் உலகிற்கு அறிவித்துள்ளது.
இதுபற்றி ஆஞ்சநேயர் திருப்பதி மலையில் தான் அவதரித்தாரா இன்று ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட பண்டிதர்கள் அடங்கிய குழுவின் தலைவரான பேராசிரியர் முரளிதர்சர்மா, ஆஞ்சநேயரின் தாய் ஆன அஞ்சனா தேவி தற்போது திருமலை என்று கூறப்படும் அஞ்சனாத்திரி மலையில் வராக சுவாமியை தரிசித்து கடும் தவமியற்றி ஆஞ்சநேயரை பெற்றெடுத்தார் என்று வேங்கடாசல மகாத்மியம், வராக புராணம் ஆகியவை உள்ளிட்ட 12 புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கம்பராமாயணத்திலும், வேதாந்த தேசிகர் எழுதிய ஹம்ச தூதம் என்ற நூலிலும் ஆஞ்சநேயரை அஞ்சனாதேவி திருமலையில் பெற்றெடுத்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை தவிர ஸ்கந்த புராணத்திலும் சுவர்ணமுகி நதி அருகே இருக்கும் அஞ்சனாத்திரி மலையில் வராகசாமியை தரிசித்து அஞ்சனா தேவி ஆஞ்சநேயரை பெற்றெடுத்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் ஆஞ்சநேயர் சட்டீஸ்கர், நாசிக், ஹம்பி ஆகிய பகுதியில் அவதரித்ததாக கூறுகின்றனர் என்று குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நீண்ட பெரும் முயற்சியை மேற்கொண்டு ஆஞ்சநேயரின் அவதார திருத்தலம் திருப்பதி மலையே என்று தெளிவுபடுத்திய திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்றி கூறினார்.
இந்தநிலையில் அயோத்தியில் ராமருக்கு கட்டப்படும் பிரமாண்டமான கோவில் போன்ற ஒன்றை ஆஞ்சநேயரின் அவதார திருத்தலமான திருப்பதி மலையில் கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.