இந்தி இணைப்பு மொழி சர்ச்சை - ஏ.ஆர். ரஹ்மானை தொடர்ந்து குரல் கொடுக்கும் பிரபலங்கள் ; ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டாக்

simbu Anirudh Silambarasan ARRahman TamilConnects தமிழால்இணைவோம்
By Swetha Subash Apr 13, 2022 06:35 AM GMT
Report

இந்தி இணைப்பு மொழி சர்ச்சைக்கு எதிராக  ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்ந்து தமிழ் பிரபலங்களும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற பாரளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37 வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,

இந்தி மொழியானது மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி பற்றிய தொகுப்புகள் எல்லாம் இந்தி மொழியில் உருவாக்கப்படுள்ளது என்றும் ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக மாநிலங்கள் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநில மொழிகள் பற்றிய உரிமை குறித்து பல்வேறு நபர்களும் மத்திய அரசுக்கு எதிராக தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழணங்கு , 'இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்' என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரியை குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.

தொடர்ந்து சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை சார்பில் தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட ஏ.ஆர். ரஹ்மானிடம், இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற கருத்து பற்றி செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ் தான் என படு கூலாக பதில் கூறிவிட்டு ஏ,ஆர்.ஆர் காரில் ஏறிச்சென்றார்.

இந்நிலையில், தற்போது ஏ.ஆர். ரஹ்மானை தொடர்ந்து நடிகர் சிம்பு மற்றும் இளம் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் “தமிழால் இணைவோம்” என்று தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளனர்.

இதன் காரணமாக “தமிழால் இணைவோம்” என்ற பதிவு ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.