ஆட்டுத் தலையுடன் மனித உருவம்; பீதியில் மக்கள் - தமிழக அரசு விளக்கம்
மனிதர்களை தாக்கிய வினோத விலங்கு என்று புகைப்படம் ஒன்று பரவியது.
வினோத விலங்கு
திருவண்ணாமலை, அருகே ராதாபுரத்தில் அரசுக்கு சொந்தமான காப்பு காடுகள் மற்றும் வனப்பகுதிகள் உள்ளது. இங்கு ஏராளமான மான், முயல், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளது.
இந்நிலையில், தண்டரம்பட்டு வட்டம் கீழ்வலசை என்ற கிராமத்தில் ஒரு வித்தியாசமான விலங்கு உலவுவதாக பகீர் தகவல் பரவியது. அந்த விலங்குக்கு 4 விரல்கள் உள்ளதாகவும், ஆட்டின் தலை இருப்பதாகவும் கூறப்பட்டது.
மேலும், அந்த மர்ம உயிரினம், காட்டில் திடீரென்று ஒரு பெண்ணை தாக்கிவிட்டதாக கூறி, அது தொடர்பான சில போட்டோக்கள் வைரலானது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம்,
அரசு விளக்கம்
"இது முற்றிலும் வதந்தி. நீளமான நகங்கள், 4 விரல்களை கொண்ட கால்கள் மற்றும் ஆட்டின் தலையுடைய மனித உருவிலான வித்தியாசமான உயிரினத்தின் புகைப்படம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதனை 'ஆடு மனிதன்' என்றும், வேற்றுக்கிரகவாசி என்றும் குறிப்பிட்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வதந்தி பரப்பப்பட்டது. இது 2011-ம் ஆண்டு கிராபிக்ஸ் போட்டிக்காக உருவாக்கப்பட்ட படமாகும். அதை பகிர்ந்து திருவண்ணாமலையில் நடந்த சம்பவம் என்று வதந்தி பரப்பி வருகிறார்கள்” என தெரிவித்துள்ளது.