பாஜக எம்.பி மீது பாலியல் குற்றச்சாட்டு - நடவடிக்கை எடுக்க கோரி போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு கும்ப்ளே ஆதரவு..!
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டு
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.
கடந்த 28ம் தேதி நாடாளுமன்ற புதிய கட்டடம் திறப்பு விழாவையொட்டி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.

அவர்களை போலீசார் தடுத்த நிறுத்தினர் அப்போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் வீரர் மற்றும் வீராங்கனைகளை கைது செய்தனர்.
வீராங்கனை பஜ்ரங் புனியா மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கபடாது என டெல்லி போலீசார் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.
கங்கை நதியில் பதக்கங்களை வீச சென்ற வீராங்கனைகள்
38 நாட்கள் போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் நடத்தினர் பின்னர் 28ம் தேதி அவர்கள் சட்டத்தை மீறிவிட்டனர். அதனால் அவர்கள் ஜந்தர் மந்தரில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியதாகிவிட்டது. டெல்லியில் இனி ஜந்தர் மந்தரை தவிர்த்து மற்ற பகுதியில் நடத்தலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக அறிவித்து இருந்தனர் மல்யுத்த வீரர்கள். அதை தொடர்ந்து நேற்று அறிவித்தது படி கங்கை நதியில் பதக்கங்களை வீச சென்றனர். அவர்களை விவசாயிகள் மற்றும் சில பஞ்சாயத்து அமைப்பினர் தடுத்து நிறுத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
அனில் கும்ப்ளே ஆதரவு
இதனிடையே, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக போராடிவரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றபோது மல்யுத்த வீராங்கனைகளை காவல்துறையினர் கையாண்ட விதம் குறித்து கேள்விப்பட்டபோது அதிர்ச்சி அடைந்ததாகவும், சரியான பேச்சுவார்த்தை மூலம் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியும் என்றும் இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, 45 நாட்களில் இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் மீறினால் இடைநீக்கம் எனவும் உலக மல்யுத்த கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.