ஆண்டிப்பட்டியில் 2வது முறையாக எதிரெதிர் கட்சியில் போட்டியிடும் அண்ணன்- தம்பி
தேனிமாவட்டம் ஆண்டிபட்டியில் எதிரெதிர் கட்சியில் உடன்பிறந்த அண்ணன்-தம்பி போட்டியிடுவது கவனத்தை ஈர்த்துள்ளது. தேனீ மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி மிகவும் பிரபலமான தொகுதியாகும். ஏனெனில் இந்த தொகுதியில் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோர் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற தொகுதியாகும்.
இந்த தொகுதியில் 2019-ம் ஆண்டு இங்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக.சார்பில் மகாராஜனும், அதிமுக. சார்பில் லோகிராஜனும் போட்டியிட்டனர். இருவரும் உடன்பிறந்த சகோதாரர்கள் ஆவர். இதனால் இத்தொகுதி மாநில அளவிலான கவனத்தைப் பெற்றது. இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் மகாராஜன் தனது தம்பி லோகிராஜனைவிட 12ஆயிரத்து 323 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து இருவரும் இத்தொகுதியில் காலூன்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். சட்டப்பேரவை உறுப்பினர் மகாராஜன் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள், கரோனா காலத்தில் நலத்திட்ட உதவி போன்றவற்றை செய்து வந்தார். மகாராஜன் ஆண்டிபட்டி ஒன்றியக்குழுத் தலைவராக இருப்பதால் அதன் மூலம் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக உடன்பிறந்த சகோதரர்கள் அவரவர் கட்சியில் விருப்பமனு அளித்திருந்தனர்.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக.வேட்பாளராக லோகிராஜனும், இன்று வெளியான திமுக.பட்டியலில் மகாராஜனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இரண்டாவது முறையாக ஒரே தொகுதியில் இரண்டாவது முறையாக உடன் பிறந்தவரால் போட்டியிடுவது சுவாரசியத்தைப் பெற்றுள்ளது.