ஆண்டிப்பட்டி நர்சு கொலை திருப்பம் - சிக்கிய கள்ளக்காதலன் தற்கொலை
ஆண்டிபட்டி செவிலியர் மர்மகொலையில் திடீர் திருப்பமாக, உடன் பணியாற்றிய ஆண் செவிலியர் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பாரதி நகரைச் சேர்ந்தவர் சமையல் மாஸ்டர் சுரேஷ்.இவரது மனைவி செல்வி என்பவர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தனியாக வீடு எடுத்து தங்கி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். சுரேஷ் கடந்த மாதம் 24 ஆம் தேதி செல்விக்கு போன் செய்துள்ளார்.
நீண்ட நேரமாகி போன் எடுக்காததால் சந்தேகமடைந்த சுரேஷ் ஆண்டிப்பட்டியில் இருக்கும் தனது உறவினரை அழைத்து வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.உறவினர் சென்று பார்த்தபோது செல்வி மர்மநபரால் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார். தகவல் அறிந்து வந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே சம்பவ இடத்தை பார்வையிட்டு கொலையாளிகளை பிடிப்பதற்கு 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.
சம்பவ இடத்தில் சோதனை செய்ததில் கால் ரேகைகள் சிக்கிய நிலையில், செவிலியர் செல்வியுடன் தொடர்புடைய 300க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இருந்தபோதிலும், கொலை சம்பவம் குறித்து எந்த துப்பும் கிடைக்காததால் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர்.இதையடுத்து விசாரணையை வேறு கோணத்தில் தொடங்கிய போலீசார் செல்வியிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களை கடந்த 0 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு அழைத்தனர்.
அப்போது தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த 34 வயதான ராமச்சந்திரபிரபு என்பவரையும் அழைத்தனர்.இவர் கம்பம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணைக்கு மறுநாள் வருமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
மறுநாள் 10 ஆம் தேதி விசாரணைக்கு செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. காவல்துறையினர் விசாரணைக்கும் அவர் ஆஜராகவில்லை. காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தரும்படி அவரது மனைவி பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து தேடப்பட்டு வந்த நிலையில், டிசம்பர் 11 ஆம் தேதி உத்தமபாளையம் அருகே ஊத்துக்காடு பகுதியில் ராமச்சந்திரபிரபு சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இதனால் தற்கொலை செய்து கொண்ட ராமச்சந்திரபிரபு மீது போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்தது. விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு ஆண்டிபட்டி செவிலியர் செல்வியை கொலை செய்தது ராமச்சிந்திரபிரபு தான் என்பதை உறுதிப்படுத்தினர். கொலை செய்யப்பட்ட செவிலியர் செல்வியும், மருத்துவ பணியாளர் ராமச்சந்திரபிரபுவும் 10 ஆண்டுக்கு முன்பு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் வேலை செய்து வந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் இருவரும் வெவ்வேறு மருத்துவமனையில் பணியாற்றிய போதும், இவர்களுக்கிடையேயான உறவு நீடித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இருவருக்கும் இடையே லட்சக்கணக்கில் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இவற்றில் கடனாக கொடுத்த பணத்தை திரும்ப கேட்கையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று மதியம் 2 மணியளவில் ஆண்டிபட்டி வந்த ராமச்சந்திரபிரபு, செவிலியர் செல்வியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் ஜாலியாக் இருந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. அந்த சண்டையில் ராமச்சந்திரபிரபு செல்வியை கொலை செய்துள்ளார்.
அதன்பின்னர் சுமார் 3.40 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறி அவர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.மேலும் செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியையும் எடுத்து கொண்டு சென்றுள்ளார். அந்த நகையை தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் ராமச்சந்திரபிரபு அடகு வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ராமச்சந்திரபிரபு வந்து சென்றது, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.வீட்டில் பதிவாகி இருந்த கால் ரேகையும் ராமச்சந்திரபிரபுவின் கால் ரேகையும் ஒத்து போகிறது. இதையடுத்தே அவர் குற்றவாளி என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.