“வேண்டும்...வேண்டும்“ - மதுக்கடை அமைக்க வேண்டும் என பெண்கள் போராட்டம்
ஆந்திராவில் தங்கள் கிராமத்திற்கு மதுக்கடை ஒதுக்கி விரைவாக அதனை திறக்க வேண்டும் என சாலையில் இறங்கி கிராமத்து பெண்கள் போராடியிருக்கும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுக்கடைகள் வேண்டாம் எனவும், பள்ளி, கோவில்கள் அருகே இருக்கக்கூடிய மதுக்கடைகளை இடமாறுதல் செய்ய சொல்லி வலியுறுத்தி பெண்கள் போராடி வந்திருப்பதை நாம் பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தங்கள் ஊரில் மதுக்கடை திறக்க வேண்டும் என ஆண்களுக்கு பதிலாக பெண்கள் தொடங்கியிருக்கும் போராட்டம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் விழியநகரம் மாவட்டத்தில் உள்ள பெடமெடப்பள்ளி எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தான் தங்கள் ஊரில் மதுக்கடை தொடங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..
இதற்கான காரணத்தை அப்பெண்கள் கூறியுள்ளனர். அதில் தங்கள் கிராமத்து ஆண்கள் குடிக்கக் கூடாது என நினைத்தோம், அவர்கள் குடிக்காமல் இருந்தால் தான் எங்கள் வாழ்க்கை மேம்படும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அவர்கள் குடிப்பதை நிறுத்தவில்லை, எங்கள் ஊரில் பிளாக்கில் வைத்து மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மதுவகைகள் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
50 முதல் 100 ரூபாய் என அதிக விலைக்கு விற்பனை செய்வதால் வேறு வழியில்லாமல் எங்கள் ஊர் ஆண்களும் அதிக விலையை கொடுத்து குடிக்கிறார்கள். இதனால் எங்களின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் ஊரில் மதுக்கடை இருந்தால் குறைந்த விலைக்கே மதுவை வாங்கிவிடலாம். எனவே தான் நாங்கள் மதுக்கடை கோரி போராடுவதாக தெரிவித்துள்ளனர்.