நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 50 ரூபாய்க்கு குவாட்டர் : பாஜக மநில தலைவர் பேச்சால் சலசலப்பு
ஆந்திரா மாநிலத்தில் அடுத்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவை வெற்றி பெற வைத்தால், தரமான குவார்ட்டர் மது பாட்டில் ரூ. 50க்கு விற்பனை செய்யப்படும் என்று பாஜக மாநில தலைவர் சோமு வீரராஜு அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய வீரராஜு மாநில அரசு அதிக விலைக்கு தரமற்ற மதுவை மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.
போலியான மதுபானங்களை அதிக விலைக்கு விற்கின்றனர். அதேசமயம், மக்களுக்கு தரமான மதுபானங்கள் விற்பனைக்கு வருவதில்லை. ஆந்திராவில் ஆளுங்கட்சித் தலைவர்கள் பலரும் மது ஆலைகளை நடத்துகின்றனர்.
இந்த மது ஆலைகளில் தரமற்ற மதுவே தயாரித்து விற்கப்படுகிறது. ஆந்திராவில் உள்ள ஒவ்வொருவரும் மதுவுக்காக மட்டும் மாதத்திற்கு ரூ. 12,000 வரை செலவிடுகிறார்கள். அந்தப் பணத்தைத்தான் அரசு மக்களிடம் நலத் திட்டங்கள் என்று பெயரில் செலவிட்டுக் கொள்கிறது.
ஆந்திராவில் ஒரு கோடி பேர் மது அருந்துகிறார்கள். அந்த ஒரு கோடி பேரும் 2024 சட்டசபைத் தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
அப்படி வாக்களித்தால் முதலில் தரமான குவார்ட்டர் பாட்டில் மதுவை ரூ. 75க்கு விற்போம். பின்னர் அதை மேலும் குறைத்து 50 ரூபாய்க்குத் தருவோம் என்றார் சோமு வீரராஜு தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் சோமு வீரராஜு - ன் இந்த அறிவிப்பு ஆந்திர அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.