மேட்ரிமோனியில் காதல் வலை- 11 பெண்களிடம் ரூ.3 கோடி வரை ஏமாற்றிய காதல் மன்னன்
ஆந்திராவில் மேட்ரிமோனி தளத்தை பயன்படுத்தி இளம்பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் சமீபகாலமாக மேட்ரிமோனி தளத்தை பயன்படுத்தி இளம்பெண்களிடம் மோசடி செய்து பண சம்பாதிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. படித்த இளைஞர்களில் சிலர் போலி வெப்சைட்களை உருவாக்கியும் அல்லது ஏற்கனவே உள்ள மேட்ரிமோனி சைட்களை பயன்படுத்தியும் இந்த மோசடியில் தொடந்து ஈடுபட்டு வருகின்றனர்.
படித்து நல்ல வேலையில் இருக்கும் பெண்கள், விவாகரத்து ஆன நிலையில் மறுமணம் செய்ய காத்திருக்கும் பெண்கள் தான் இவர்களின் டார்கெட்டாக உள்ளது. அந்த வகையில் ஆந்திராவில் மேட்ரிமோனி தளத்தை பயன்படுத்தி இளைஞர் ஒருவர் இளம்பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள செட்டிகாலபூடி கிராமத்தை சேர்ந்த புன்னட்டி சீனிவாஸ் என்பவர் எம்.டெக் பட்டப்படிப்பு படித்துவிட்டு வேலை இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்துள்ளார். பணம் சம்பாதிப்பதற்காக குறுக்கு வழியை தேடிய அவர் இதற்காக மேட்ரிமோனியல் சைட்ஸ், மற்றும் டேட்டிங் சைட்ஸ் ஆகியவற்றில் தங்கள் பெயர், விவரங்களை பதிவு செய்து இருக்கும் அதிக அளவில் பணம் சம்பாதிக்கும் இளம் பெண்களை தேடிப்பிடித்து அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
முதலில் அவர்களுடன் நண்பர் போல பழகி அதன்பின் காதல் வலையில் சீனிவாஸ் வீழ்த்துவார். ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் என இவரிடம் பலரும் ஏமாந்து போயுள்ளனர். இளம்பெண் ஒருவர் சைபர் க்ரைமில் கொடுத்த புகாரின் பேரில் இவரது உண்மை முகம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறிப்பாக மேட்ரிமோனி தளத்தில் பெண் தேடுவது போல் தன் சுயவிவரங்களை அதில் பதிவு செய்து பெண்களுடன் பேசிப்பழக ஆரம்பித்தவுடன் அவர்களது மொபைல் எண்ணை வாங்கி காதல் வலையில் வீழ்த்திவிட்டு சீனிவாஸ் பணம் கறக்க ஆரம்பிப்பார்.
இதுவரை 11 பெண்களை காதல் வலையில் வீழ்த்திய சீனிவாஸ் தொழில் செய்வதற்கு பணம் தேவை என கூறி ரூ.3 கோடி வரை மோசடி செய்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக சித்தூர் மாவட்டத்தில் உள்ள நரசிங்க ராயப்பேட்டை, மதனப்பள்ளி ஆகிய காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சீனிவாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.