திருமணமான ஒரே வருடத்தில் இளம்பெண் தற்கொலை - பொதுமக்கள் அதிர்ச்சி

By Petchi Avudaiappan Apr 20, 2022 09:43 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சென்னையில் திருமணமான ஒரே வருடத்தில் இளம்பெண் ஒருவர்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த திருவேற்காடு கனக துர்கா நகரை சேர்ந்த ஹரிபாபு என்பவர் , தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு இவருக்கும்  ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஜெயந்தி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. 

இதனிடையே நேற்று ஜெயந்தி தனது அறைக்குள் இருந்து நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை திறந்து பார்த்தபோது, அவர் மின்விசிறியில் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து ஜெயந்தியை மீட்டு  தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார் ஜெயந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சமீபகாலமாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனை எழுந்துவந்ததாகவும்,  அதனால் ஜெயந்தி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக கணவர் வேலைக்கு சென்றதும் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த  சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.