ஆந்திராவில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் உயிரிழந்த சோகம்
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஆற்றில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஏலூர் அருகே ஆற்றுப்பாலத்தை கடந்தபோது பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 9 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அஸ்வராவ்பேட்டையில் இருந்து ஜங்காரெட்டிகுடெம் நோக்கி சுமார் 47 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது, ஜில்லருவாகு பகுதியில் பாலம் ஒன்றின் மீது சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி மீது மோதுவதை தவிர்க்க ஓட்டுனர் பேருந்தை திருப்பிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது.
அதனால், நிலைதடுமாறிய பேருந்து, பாலத்தில் மோதி, பக்கவாட்டுச் சுவர்களை உடைத்துக் கொண்டு, கோதாவரி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பேருந்தில் பயணித்தவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் உடனடியாக தியணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் உள்ளூர் மக்கள் உதவியுடன் இறங்கினர்.மேலும் விபத்து நடந்த பகுதியிலுள்ளவர்கள் படகுகள் மூலம் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில் பேருந்து ஓட்டுனர், 5 பெண்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் மூழு விச்சில் மீட்புபணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படும் நிலையில் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.