சதித்திட்ட அடிப்படையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் - அன்புமணி ராமதாஸ்

Indian fishermen Anbumani Ramadoss Tamil nadu Sri Lanka Sri Lanka Fisherman
By Karthikraja Nov 11, 2024 06:41 AM GMT
Report

இந்தியா இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

இந்தியா இலங்கை மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுகளை விரைந்து நடத்த மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

anbumani ramadoss

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களின் மூன்று விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. 

அரசின் உத்தரவை முதல்வரே மீறலாமா? மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்

அரசின் உத்தரவை முதல்வரே மீறலாமா? மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்

தமிழக மீனவர்கள் கைது

வங்கக்கடலில் கச்சத்தீவை ஒட்டிய பகுதிகளில் மீன் பிடிப்பதற்கு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கும் நிலையில் அவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வது கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு காரணம் அவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பது தான் என்று இலங்கை அரசின் சார்பில் கூறப்படுவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதவை. தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் சூழலைப் பார்த்தாலே அதன் பின்னணியை புரிந்து கொள்ள முடியும். கடந்த 15 நாட்களில் தமிழக மீனவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. 

anbumani ramadoss

கடந்த 27 ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேர் இரு நாட்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து இப்போது 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மீனவர்கள் எப்போதும் தங்கள் நாட்டு சிறைகளில் அடைபட்டு கிடக்க வேண்டும் என்று நினைக்கும் இலங்கை அரசு, அதற்கான சதித்திட்டத்தின் அடிப்படையில் தமிழக மீனவர்களை கைது செய்து வருகிறது.

கூட்டுப் பணிக்குழு கூட்டம்

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் கடந்த மாதம் 29-ஆம் தேதி மீனவர் பிரச்சினைக்கான இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. அதில் மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், கூட்டம் முடிந்து 13 நாட்களாகியும் அதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாதது வருத்தமளிக்கிறது.இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுகளை விரைந்து நடத்த மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.