தமிழக அரசுக்கு ஒரே ஆண்டில் ரூ.1900 கோடி இழப்பு - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

Anbumani Ramadoss Government of Tamil Nadu Rice
By Karthikraja Nov 20, 2024 01:10 PM GMT
Report

அரிசி கடத்தல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் நியாயவிலைக்கடை அரிசி கடத்தலால் 2022-23 ஆம் ஆண்டில் அரசுக்கு ரூ.1900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். 

அரிசிக் கடத்தல் கடத்தலைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிடவேண்டுமென்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அரசின் உத்தரவை முதல்வரே மீறலாமா? மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்

அரசின் உத்தரவை முதல்வரே மீறலாமா? மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்

1900 கோடி இழப்பு

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொது வினியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் உரியவர்களை சென்றடையாமல் 2022-23ஆம் ஆண்டில் நாடு முழுவதும் ரூ.69,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், தமிழ்நாட்டில் இலவசமாக வழங்கப்பட வேண்டிய அரிசி மக்களுக்கு வழங்கப்படாமல் வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டதன் மூலமாக மட்டும் ரூ.1900 கோடி தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சிக்குழு (Indian Council for Research on International Economic Relations) என்ற பொருளாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

anbumani ramadoss

மக்களுக்கு சென்றடைய வேண்டிய உணவு தானியங்கள் முறைகேடான வழிகளில் திருப்பிவிடப்படுவதை மத்திய, மாநில அரசுகள் தடுக்கத் தவறியது கண்டிக்கத்தக்கது. 2022-23 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 5.2 லட்சம் டன் அரிசி, அரசின் கணக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, பயனாளிகளைச் சென்றடையவில்லை. இது நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்பட வேண்டிய அரிசியின் அளவில் 15.80% என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.2 லட்சம் டன் அரிசி கடத்தல்

இந்த அரிசி பயனாளிகளைச் சென்றடையவில்லை என்றால், எங்கு சென்றிருக்கும் என்ற வினாவுக்கு பதிலளித்த ஆராய்ச்சி அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரான பேராசிரியர் அசோக் குலாட்டி, ‘’ அந்த அரிசி வெளிச்சந்தையில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் அல்லது ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.

அதாவது நியாயவிலைக்கடைகளில் மொத்தம் 21.67 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச அரிசி அப்பட்டமாக கடத்தப்பட்டிருக்கிறது என்பது தான் இதன் பொருள்.தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசியில் ரூ.1900 கோடி மதிப்புள்ள 5.2 லட்சம் டன் அரிசி கடத்திச் செல்லப்படுவதை மன்னிக்கவே முடியாது. அரசு மற்றும் அரசுத்துறை அதிகாரிகளின் துணையின்றி இந்தக் கடத்தல் நடைபெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்று தான் தோன்றுகிறது. 

anbumani ramadoss

இதே காலக்கட்டத்தில் வெறும் ரூ.2.4 கோடி மதிப்புள்ள 42,500 டன் கடத்தல் அரிசியை மட்டும் தான் தமிழக அரசு பறிமுதல் செய்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கடத்தல் தொடர்பாக ஒரு சில நியாயவிலைக்கடை ஊழியர்கள் தவிர வேறு யார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சிபிஐ விசாரணை

தமிழ்நாட்டில் உணவுத்துறையின் கிடங்குகளில் இருந்து நியாயவிலைக்கடைகளுக்கு அரிசி ஏற்றிச் செல்லும் அனைத்து சரக்குந்துகளிலும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. அத்தகைய சூழலில் நியாயவிலைக்கடை பணியாளர்கள் அல்லது கீழ்நிலை அதிகாரிகளால் மட்டும் இந்த கடத்தலை செய்திருக்க முடியாது என்றும், மேலிடத்தின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமல்ல என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

வறுமையில் வாடும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசியை கடத்திச் செல்வதை விட கொடிய குற்றச்செயல் எதுவும் இருக்க முடியாது. தமிழ்நாடு கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் உணவு மானியமாக மட்டும் 2022-23ஆம் ஆண்டில் ரூ.7500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் ஐந்தில் ஒரு பங்கு அளவு மக்களுக்குச் சென்றடையாமல் வீணாகியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இனி வரும் காலங்களில் இத்தகைய உணவு தானியக் கடத்தலைத் தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 2022-23ஆம் ஆண்டில் நடைபெற்ற அரிசிக் கடத்தல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.