திராவிட மாடல் அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு அம்பலமானது - அன்புமணி கண்டனம்

Samsung Anbumani Ramadoss M K Stalin Kanchipuram DMK
By Karthikraja Oct 09, 2024 06:21 AM GMT
Report

திராவிட மாடல் அரசு எப்போதும் முதலாளிகளுக்கான அரசு என அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சாம்சங் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் தொழிற்சாலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

samsung protest

நேற்று நள்ளிரவில் போராட்ட பந்தலை அகற்றிய காவல்துறை சில ஊழியர்களை கைது செய்துள்ளனர். தற்போதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவுகிறது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மதியம் அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது. 

தமிழர்களுக்கே 80% வேலை என சட்டம் வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை

தமிழர்களுக்கே 80% வேலை என சட்டம் வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை

அன்புமணி ராமதாஸ்

இந்த கைதை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் கடந்த சில வாரங்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களின் போராட்ட பந்தலை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறையினர் நேற்று இரவோடு, இரவாக அகற்றியுள்ளனர். 

anbumani ramadoss

அதுமட்டுமின்றி, போராட்டத்தை முன்னெடுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரை கைது செய்து சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்துள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது தான் தங்களின் முதன்மை நோக்கம் என்று கூறி வந்த தமிழக அரசு, இப்போது அப்பட்டமாக சாம்சங் நிறுவனத்தின் கையாளாக மாறி தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு வருகிறது.

முதலாளிகளுக்கான அரசு

தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து இரு தரப்பினரையும் அழைத்துப் பேசிய தமிழக அரசு, அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை கண்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு பொம்மை தொழிற்சங்கத்தை உருவாக்கி சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்த அரசு, அதற்கு உடன்படாத தொழிலாளர்களை மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திராவிட மாடல் அரசு என்பது எப்போதும் முதலாளிகளுக்கான அரசு தான் என்பதும், தொழிலாளிகளின் நலன் குறித்து அது ஒருபோதும் கவலைப்படாது என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசின் இந்த அடக்குமுறையையும், துரோகத்தையும் தொழிலாளர் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது. மக்கள் விரோத அரசுக்கு தொழிலாளர்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி" என தெரிவித்துள்ளார்.