டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் மாணவர்கள்?அரசுக்கு அன்புமணி சரமாரி கேள்வி!
‘டிஜிட்டல் பயிர் சர்வே’ மேற்கொள்ள வேண்டியது வேளாண்துறையின் பணி அல்ல என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி
தமிழ்நாடு முழுவதும் வேளாண் நிலம், பயிர் குறித்த அனைத்து விவரங்களையும் டிஜிட்டல்மயமாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு வரும் டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு பதிலாக வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் இயலாமையை மறைப்பதற்காக மாணவ, மாணவியரின் பாதுகாப்பை பலி கொடுப்பது கண்டிக்கத்தக்கது. ‘டிஜிட்டல் பயிர் சர்வே’ மேற்கொள்ள வேண்டியது வேளாண்துறையின் பணி அல்ல. வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தின் மேற்பார்வையில் வருவாய்த்துறை தான் இதை செய்ய வேண்டும்.
அதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பைக் கூட ஏற்படுத்தித் தராமல், இந்த பணிகளை மேற்கொள்ளும்படி கிராம நிர்வாக அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆனால், அடிப்படை வசதிகளும், ஊக்கத்தொகையும் இல்லாமல் இந்தப் பணியை செய்ய முடியாது என்று கூறிவிட்டதால், இந்த சுமை முழுவதும் மாணவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த முடிவுகள் அனைத்தும் அதிகாரிகள் நிலையில் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்? டிஜிட்டல் பயிர் சர்வே திட்டத்திற்கு ரூ.2817 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு மட்டும் ரூ.1940 கோடியை வழங்குகிறது.
டிஜிட்டல் பயிர் சர்வே
இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டு தனியார் நிறுவனங்கள் மூலமாகவோ, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலமாகவே இப்பணியை தமிழகத்தில் எளிதாக செய்ய முடியும். அதை விடுத்து மாணவர்கள் மூலம் இந்தப் பணியை செலவின்றி செய்யத் துடிக்கும் அரசு,
அதற்காக நிதியை என்ன செய்யப்போகிறது? கல்வி கற்க வேண்டிய மாணவ, மாணவியரை இத்தகைய கடுமையான பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது. மத்திய அரசு வழங்கும் நிதியைக் கொண்டு டிஜிட்டல் பயிர் சர்வே பணியை வேறு அமைப்புகள் மூலம் தமிழக அரசு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.