திமுக அரசு படைத்திருப்பது சாதனை அல்ல; கொடும் வேதனை - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

Anbumani Ramadoss DMK
By Karthikraja Oct 26, 2025 02:30 PM GMT
Report

விவசாயிகள் விடும் சாபம் திமுக ஆட்சியாளர்களை சும்மா விடாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நெல் கொள்முதல் சாதனை

உழவர்களிடமிருந்து போதிய அளவு நெல்லை கொள்முதல் செய்யாமல் திமுக அரசு துரோகம் செய்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். 

திமுக அரசு படைத்திருப்பது சாதனை அல்ல; கொடும் வேதனை - அன்புமணி ராமதாஸ் ஆவேசம் | Anbumani Slams Dmk Govt In Paddy Procurement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் விவசாயிகளிடம் அதிமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டதை விட மிகவும் அதிகமாக ஆண்டுக்கு சராசரியாக 42 இலட்சத்து 61 ஆயிரத்து 386 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும், இது பெரும் சாதனை என்றும் திமுக அரசு கூறியிருக்கிறது.

அரும்பாடுபட்டு விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் வேதனையை தங்களின் சாதனை என திமுக அரசு தம்பட்டம் அடித்துக் கொள்வது கண்டிக்கத்தக்கது.

எப்போதெல்லாம் திமுக அரசு ஒரு விஷயத்தில் பெரும் தோல்வி அடைகிறதோ, அப்போதெல்லாம் கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகளுடனான ஒப்பீடுகள், சராசரிக் கணக்குகள் ஆகியவற்றைத் தூக்கிக் கொண்டு வந்து தங்களின் தவறுகளை நியாயப்படுத்த திமுக அரசு முயலும்.

இப்போதும் கூட அதே உத்தியை திமுக அரசு கையாண்டிருக்கிறது. உழவர்களின் கண்ணீரில் திமுகவின் இந்த பொய் மூட்டைகள் கரைந்து விடும் என்பது தான் உண்மை.

திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 1.70 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. உண்மையில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 4.80 கோடி டன் நெல் விளைவிக்கப்பட்டிருக்கிறது.

துரோகம் செய்யும் திமுக அரசு

அதில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் தான் திமுக அரசு கொள்முதல் செய்திருக்கிறது. இது சாதனையா, வேதனையா? 2023&24ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 5.245 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், அதில் தமிழகத்தின் பங்கு வெறும் 4.52% மட்டும் தான். 

திமுக அரசு படைத்திருப்பது சாதனை அல்ல; கொடும் வேதனை - அன்புமணி ராமதாஸ் ஆவேசம் | Anbumani Slams Dmk Govt In Paddy Procurement

அதேநேரத்தில் பஞ்சாபிலிருந்து 23.62%, தெலங்கானா 12.15%, சத்தீஸ்கர் 15.80%, ஒதிஷா 9.17% நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. உழவர்களிடமிருந்து போதிய அளவு நெல்லை கொள்முதல் செய்யாமல் திமுக அரசு துரோகம் செய்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் தேவை?

உழவர்களுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 விலை கொடுப்பதாக திமுக அரசு பெருமைப்படுகிறது. ஆனால், ஒதிஷாவில் ரூ.3169, ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் ரூ.2869 வீதம் ஒரு குவிண்டால் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இது தமிழ்நாட்டு உழவர்களுக்கு திமுக அரசால் இழைக்கப்படும் துரோகம் அல்லவா?

சாதனையா, வேதனையா?

உழவர்களுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 தருவது திமுக அரசு அல்ல. அதில் ரூ.2369 -ஐ மத்திய அரசு தான் வழங்குகிறது. திமுக அரசின் சார்பில் வழங்கப்படுவது வெறும் ரூ.131 ஊக்கத்தொகை மட்டும் தான். அதுவும் கூட முந்தைய ஆட்சியில் ரூ.50 வழங்கப்பட்டு வந்தது.

அதை கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.81 உயர்த்தியுள்ளது. 2021-ஆம் ஆண்டில் நெல்லுக்கு ரூ.2500 வழங்குவதாக சத்தியம் செய்த திமுக ஐந்தாண்டுகளில் வெறும் ரூ.81 உயர்த்தி வழங்கியிருப்பது சாதனையா, வேதனையா? 

திமுக அரசு படைத்திருப்பது சாதனை அல்ல; கொடும் வேதனை - அன்புமணி ராமதாஸ் ஆவேசம் | Anbumani Slams Dmk Govt In Paddy Procurement

காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யப்படாததாலும், மழையில் நனைந்து நெல் வீணாணதாலும் உழவர்கள் கண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றனர். அதைத் துடைக்க திமுக அரசு எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை.

விவசாயிகள் விடும் சாபம்

மாறாக கடந்த கால புள்ளிவிவரங்களை காட்டி திமுக அரசு புளங்காகிதம் அடைந்து கொள்கிறது. இந்த வெற்று புள்ளிவிவரங்களால் காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு எந்த பயனும் இல்லை.

எனவே, ஒன்றுக்கும் உதவாத கணக்குகளைக் கூறுவதை விடுத்து காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதலை தீவிரப்படுத்தி, உழவர்களின் கண்ணீரைத் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 20 நாள்களுக்கும் மேலாக கண்ணீரில் மிதக்கும் காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் விடும் சாபம் திமுக ஆட்சியாளர்களை சும்மா விடாது" என தெரிவித்துள்ளார்.