தேர்தலுக்காக காவிரி அரசியல் செய்யக் கூடாது - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Anbumani Ramadoss Tamil nadu Karnataka
By Karthikraja Nov 17, 2026 02:51 PM GMT
Report

anbumani ramadoss slams karntaka parties doing politics in cauvery: தேர்தலுக்காக கர்நாடக கட்சிகள் காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் கண்டனம்

காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேசி வருகிறார்.  இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

தேர்தலுக்காக காவிரி அரசியல் செய்யக் கூடாது - அன்புமணி ராமதாஸ் கண்டனம் | Anbumani Slam Karntaka Parties Politics In Cauvery

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பான நடுவர் மன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்; மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் லாபம் தேடுவதற்காக காவிரி சிக்கலை கர்நாடக கட்சிகள் எழுப்புவது கண்டிக்கத்தக்கது.

பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தேவகவுடா முன்வைத்துள்ள கோரிக்கைகள் தேவையற்றவை: காவிரி விவகாரத்தை திசை திருப்பக் கூடியவை ஆகும். காவிரி சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான நடுவர் மன்றம் 36 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட தரவுகள் அனைத்தும் 50 ஆண்டுகளுக்கு முந்தியவை; காலநிலை மாற்றத்தின் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கர்நாடகத்திற்கு கிடைக்கும் நீரின் அளவு குறைந்து விட்டதாகவும் தேவகவுடா கூறியுள்ளார்.

காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பான நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு. அது செயல்பாட்டுக்கு வந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து 15 ஆண்டுகளுக்கு, அதாவது 2033 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு செயல்பாட்டுக்கு வந்து 8 ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன; இந்த 8 ஆண்டுகளில் ஓர் ஆண்டு கூட நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தால் வரையறை செய்யப்பட்ட அளவில் கர்நாடகம் தண்ணீர் வழங்கவில்லை.

அதுமட்டுமின்றி, காலநிலை மாற்றத்தினால், கர்நாடகத்திலும், கேரளத்திலும் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை குறையவில்லை என்பதையும், கர்நாடகத்தில் உள்ள காவிரி சார்ந்த அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறையவில்லை என்பதையும் ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசு வெளியிட்ட தரவுகளே உறுதிசெய்திருக்கின்றன.

அவ்வாறு இருக்கும் போது, காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பான நடுவர் மன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறுவது அப்பட்டமான அரசியல் ஆகும். கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் நீரைக் கொண்டு 11 மாவட்டங்கள் பாசன வசதி பெற்றாலும், அவற்றில் 8 மாவட்டங்களில் உள்ள 45 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காவிரி விவகாரம் தான் அரசியலையும், தேர்தல் முடிவுகளையும் தீர்மானிக்கின்றன.

கடந்த தேர்தலில் இவற்றில் பெரும்பாலான தொகுதிகளில் எச்.டி. தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் தோல்வியடைந்து விட்ட நிலையில், இம்முறையாவது அங்கு வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தான் இப்போது காவிரி விவகாரத்தை அவர் கையிலெடுத்துள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கடந்த 8 ஆம் தேதி செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலிலும், 14 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் உரையாற்றும் போதும் மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதில் தலையிட தமிழகத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்று வலியுறுத்தியதற்கும் இது தான் காரணம் ஆகும்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியைக் கருத்தில் கொண்டு தான் கர்நாடக கட்சிகள் காவிரி விவகாரத்தை அரசியலாக்கி வருகின்றன. இரு மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவை பாதிக்கும் இத்தகைய செயல்களை கைவிட வேண்டும்.

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா ஆகியோர் தேர்தலுக்காகவே காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரங்களை பேசுகிறார்கள் என்று கருதி இந்த விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருந்து விடக் கூடாது.

கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக காவிரி பாசன மாபட்டங்களில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பாரதிய ஜனதா கட்சியும் இருப்பதால், மேகதாது அணை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதை மறந்து விடக் கூடாது.

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 2018 ஆம் ஆண்டில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்த முன்னுதாரணம் இருப்பதால், இந்த விவகாரத்தில் தமிழக அரசு கடந்த காலங்களை விட கூடுதலாக விழிப்புடன் செயல்பட வேண்டும்.

அதுமட்டுமின்றி. காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தை தங்களுக்கு சாதமாக மாற்றிக்கொள்ள கர்நாடக அரசுக்கு தமிழக அரசு வாய்ப்புகளை வழங்கி விடக் கூடாது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், அதற்கு மாறாக, மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக முதலமைச்சருடன் பேச தமிழக முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்தார்; அதுமட்டுமின்றி, மேகதாது அணை சிக்கலுக்கு தீர்வு காணபதற்காக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. முந்தைய திமுக அரசும் இதே கோரிக்கையை முன்வைத்தது.

இவற்றையெல்லாம் சுட்டிக் காட்டி தான். தமிழகமே புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், பழைய நடுவர் மன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் பொறுப்பையும் புதிதாக அமைக்கப்படவுள்ள நடுவர்மன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று எச்.டி. தேவகவுடா வலியுறுத்தியுள்ளார். 

எனவே, காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரங்களில் தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மேகதாது அணை சிக்கலுக்கு தீர்வு காண புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக மேகதாது அணை விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.