2026 ஆட்சியில் பாமக அங்கம் வகிக்கும் - அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை
2026 ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெறும் அதில் பாமக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நடந்த பாமக நிர்வாகி இல்லத் திருமண நிகழ்வில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட கட்சி நிர்வாகியை சந்தித்து ஆறுதல் கூற சென்ற மாவட்ட செயலாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
கூட்டணி ஆட்சி
பனப்பாக்கம் பகுதியில் டாட்டா நிறுவன தொழிற்சாலை வந்தால் 80 சதவீதம் வேலை வாய்ப்பு உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்க வேண்டும். அப்படி இல்லை என்றால் வர வேண்டாம். ஒசூரில் இது போல டாட்டா நிறுவன தொழிற்சாலை கொண்டு வரப்பட்டு அங்கு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் வேலை வாய்ப்பு வழங்கினர்.
பல மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார் என தெரியவில்லை. கேட்டால் மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் எனக்கூறுகிறார்கள். மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டுமென்றால் ஏன் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்?
நான் பல காலமாக சொல்லி வருகிறேன் தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு நிச்சயம் கூட்டணி ஆட்சிதான் இருக்கும். அதில் நிச்சயம் பாமகவும் இருக்கும். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 1.5 ஆண்டுகள் உள்ளது. கூட்டணி குறித்து அப்போதுதான் முடிவு செய்யப்படும் என பேசினார்.