அமைச்சர் போல் பேச வேண்டும்; குடுகுடுப்பைக்காரரை போல பேசக்கூடாது - அன்புமணி விமர்சனம்

Anbumani Ramadoss DMK
By Karthikraja Oct 17, 2025 12:28 PM GMT
Report

 தமிழ்நாடு என்ன திமுகவின் குடும்ப நிறுவனமா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டிற்கு வரும் ஃபாக்ஸ்கான் நிறுவன முதலீடு தொடர்பில் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் போல் பேச வேண்டும்; குடுகுடுப்பைக்காரரை போல பேசக்கூடாது - அன்புமணி விமர்சனம் | Anbumani Ramadoss Slams Trb Raja In Boxcon Issue

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டிற்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்த ரூ.15,000 கோடி முதலீடுகள் கண்டிப்பாக வரும், கண்டிப்பாக வரும், கண்டிப்பாக வரும் என்று தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. இராஜா கூறியிருக்கிறார். அந்த முதலீடுகள் எப்படி வரும்? என்பதைத் தான் கூற மறுக்கிறார்.

அமைச்சர் கூறுவதைப் பார்க்கும் போது, நல்ல காலம் பொறக்குது; நல்ல காலம் பொறக்குது என்று குடுகுடுப்பைக்காரர் கூறுவதைப் போலத் தான் இருக்கிறது. டி.ஆர்.பி. இராஜா அமைச்சரைப் போல தெளிவாகக் கூற வேண்டும்; ஜோதிடம் கூறுவதைப் போல பேசிக் கொண்டிருக்கக்கூடாது.

ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்திருந்தது

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழில் முதலீடுகள் குறித்த சிக்கலில் அமைச்சர் டி.ஆர்.பி. இராஜா நிமிடத்திற்கு நிமிடம் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார். கடந்த 14-ஆம் தேதி இந்த விவகாரம் தொடர்பான எனது குற்றச்சாட்டுக்கு தர்க்கரீதியாக எந்த விளக்கத்தையும் அளிக்க முடியாத அமைச்சர், தேவையில்லாமல் குடும்ப சிக்கலை இழுத்தார்.

சட்டப்பேரவையில் நேற்று இது குறித்து விளக்கமளிக்கும் போது முதலீடு செய்யும் ஃபாக்ஸ்கான் நிறுவனமும், முதலீடு செய்யப் போவதில்லை என்று கூறிய ஃபாக்ஸ்கான் நிறுவனமும் வேறு வேறு என்று கூறுகிறார். திமுகவின் ஐ.டி, அணி தலைவராக இத்தகைய தகவல்களையெல்லாம் கூறி மற்றவர்களை ஏமாற்ற முயற்சி செய்யலாம்; அமைச்சராக இது போல ஆதாரமற்ற தகவல்களைக் கூறக் கூடாது. 

அமைச்சர் போல் பேச வேண்டும்; குடுகுடுப்பைக்காரரை போல பேசக்கூடாது - அன்புமணி விமர்சனம் | Anbumani Ramadoss Slams Trb Raja In Boxcon Issue

சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 13-ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி இராபர்ட் வூ சந்தித்து பேசினார். அப்போது தான் ரூ.15,000 கோடி முதலீடுகளுக்கு உறுதியளிக்கப்பட்டதாக அமைச்சர் இராஜா தெரிவித்திருந்தார்.

அதைத் தான் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்திருந்தது. அதுமட்டுமின்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசியது உண்மை.

மூடி மறைப்பதற்கு எதுவும் இல்லை

ஆனால், புதிய முதலீடுகள் குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை என்றும் அறிக்கை மூலம் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெளிவுபடுத்தி விட்டது. முதலீடு, சந்திப்பு ஆகிய இரு நிகழ்வுகளையும் ஃபாக்ஸ்கான் ஒரே அறிக்கையில் விளக்கியிருக்கும் நிலையில், எப்படி அவை இரு வேறு ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டவையாக இருக்க முடியும்?

தொழில் முதலீடுகள் குறித்த பொய்களை மூடி மறைப்பதற்காக இப்போது Geopolitical issues என்ற புதிய போர்வையை திமுக அரசு கைகளில் எடுத்திருக்கிறது. அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய 3 நாடுகளிலும் செயல்படும் நிறுவனங்களால் இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகளின் விவரங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாதாம்.

தொழில் முதலீடுகள் எனப்படுபவை துணியைப் போட்டு மூடிக் கொண்டு கைகளின் விரல்களை பிடித்து விலை பேசும் மாட்டுச் சந்தை பேரம் அல்ல.... அரசுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையிலான எந்த பரிமாற்றங்களும் வெளிப்படையாகத் தான் இருக்க வேண்டும். இவற்றில் மூடி மறைப்பதற்கு எதுவும் இல்லை.

ஒருவேளை வாதத்திற்காகவே அமைச்சர் டி.ஆர்.பி. இராஜா கூறுவதைப் போல Geopolitical issues காரணமாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் அதன் முதலீட்டை வெளிப்படையாக தெரிவிக்க முடியவில்லை என்றே வைத்துக்கொள்வோம். இனி வரவிருக்கும் அந்த முதலீட்டுக்காக தமிழக அரசுடன் ஃபாக்ஸ்கான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தமே செய்து கொள்ளாதா?

தமிழ்நாடு என்ன திமுகவின் குடும்ப நிறுவனமா?

அப்போது இந்த விவரங்கள் வெளியுலகத்திற்கு தெரிந்து விடாதா? இல்லையென்றால், Geopolitical issues காரணம் காட்டி, ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடுகளை புரிந்துணர்வு ஒப்பந்தம் இல்லாமல், அமைச்சரவையின் ஒப்புதலை பெறாமல், தொழிற்சாலை அமைக்க நிலம் ஒதுக்காமல் தமிழக அரசு அனுமதித்து விடுமா? அவ்வாறு செய்வதற்கு தமிழ்நாடு என்ன திமுகவின் குடும்ப நிறுவனமா?

சட்டப்பேரவையில் பேசும் போது இந்த அவையில் இல்லாத சிலர் தமிழ்நாட்டுக்கு வரும் முதலீடுகள் குறித்து தவறாக பேசும் போது பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைச்சர் இராஜா கூறியிருக்கிறார்.

எனது குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற முடியாமல் தான் பெயர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். அமைச்சரின் நிலைமை மிகவும் பரிதாபமாகத் தான் இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகள் வந்தால் அதைக் கண்டு மகிழ்ச்சியடையும் முதல் மனிதன் நானாகத் தான் இருப்பேன்.

ஆனால், வராத தொழில் முதலீட்டை வந்ததாகக் கூறி மக்களை ஏமாற்றும் போது, பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக அந்த மோசடிகளை அம்பலப்படுத்தாமல் எப்படி இருக்க முடியும்? தமிழ்நாட்டுக்கு ரூ.11.32 லட்சம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டும் தான் கையெழுத்தாகியுள்ளன.

ஆனால், அதன் மூலம் 34 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. இராஜா அவர்களும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடவில்லையா?

தொழில் முதலீடுகள் மூலமாக 34 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து விட்டதாக நம்பும் இளைஞர்கள், 34 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டும் கூட நமக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லையே.

அப்படியானால், 34 லட்சம் பேரில் ஒருவராக வேலை பெறுவதற்கான திறன் கூட நமக்கு இல்லையா? என்று எண்ணி தன்னம்பிக்கையை இழந்து விட மாட்டார்களா?

வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது

தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு மீது இவ்வளவு அக்கறை கொண்டிருக்கும் அமைச்சர் இராஜா அவர்கள், திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் 75% வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்க சட்டம் இயற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாதது ஏன்? அதை செய்ய திமுக அரசை எந்த சக்தி தடுக்கிறது?

இவ்வளவு வீர வசனம் பேசும் அமைச்சர் இராஜா அவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்த தொழில் முதலீடுகள் எவ்வளவு? அவற்றை கொண்டு வந்த நிறுவனங்கள் எவை? ஒவ்வொரு நிறுவனமும் எங்கெங்கு எவ்வளவு முதலீடுகளை செய்து தொழிற்சாலைகளை அமைத்துள்ளன?

அவற்றின் மூலம் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் விவரங்கள் என்ன? என்பன உள்ளிட்ட விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட தயங்குவது ஏன்? இதை செய்ய அவரை எந்த Geopolitical issue தடுக்கிறது? மீண்டும் சொல்கிறேன்... தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை திமுக அரசு கொண்டு வந்தால், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து வரவேற்பேன்.

அதே நேரத்தில் வெளிநாடுகளுக்கு அரசு செலவில் சுற்றுலா சென்று திரும்பி விட்டு, முதலீடுகள் குவிந்து விட்டன என்று கதை, திரைக்கதை எழுதி வசனம் பேசினால் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, இனியாவது மக்களை ஏமாற்ற பொய்களை முதலீடு செய்யாமல் உண்மையாகவே தொழில் முதலீடுகளை ஈர்க்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.