ஆந்திராவிலும் பாமக, ஐயா வாழும் காலத்திலே ஆட்சி - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
ஆந்திராவிலும் பாமக தொடங்கப்பட உள்ளதாக அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
பாமக பொதுக்குழு கூட்டம்
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த ஒரு ஆண்டாக நிலவி வந்த கருத்து வேறுபாடு சமீபத்தில் முடிவுக்கு வந்தது.

தனது 88வது பிறந்த நாள் நிகழ்வில் பேசிய ராமதாஸ், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், இனி அரசியலை அன்புமணி கவனித்துக்கொள்வார் எனவும் அறிவித்தார்.
இந்நிலையில், இன்று மாமல்லப்புரத்தில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸும், பொருளாளராக திலகபாமாவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் பாமக
இந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், "தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிப்பு சட்டமன்றத்திலே ஆளுநர் உரையில் வந்திருக்கிறது என்றால், அதற்கு முழு காரணம் ராமதாஸும், பாட்டாளி மக்கள் கட்சியும் தான்.

பாமகவில் நிரந்தர தலைவர் என யாரும் இல்லை. நம்முடைய கட்சி ஜனநாயகக் கட்சி. இனி பேசும்போது என்னை நிரந்தர தலைவர் என யாரும் குறிப்பிட வேண்டாம்.
மருத்துவர் ஐயா வாழும் காலத்திலேயே பாமக தமிழ்நாட்டை ஆள வேண்டும். 2031-ல் பாமக ஆட்சி அமைக்கும் வகையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும்.
இன்னும் ஒரு சில மாதங்களில் ஆந்திராவில் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படும். 3 மாதங்களாக இதற்கான வேலை நடந்துக்கொண்டிருக்கிறது. வருகின்ற சனிக்கிழமை பனையூரில் ஆந்திராவிலிருந்து முக்கிய நபர்கள் வந்து சந்திக்க இருக்கிறார்கள்" என பேசியுள்ளார்.