விக்கிரவாண்டியில் திமுகவே ஜெயிச்சதா அறிவிச்சுடுங்க - டென்சனான அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மரணமடைந்ததையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதால், திமுக பாமக மற்றும் நாம் தமிழருக்கு இடையே மும்முனை போட்டி உருவாகியுள்ளது.
தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில் இக்கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணியை ஆதரித்து அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், விக்கிரவாண்டி தொகுதி முழுக்க தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விக்கிரவாண்டியில் செய்தியாளர்களை சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்.
அன்புமணி ராமதாஸ்
செய்தியாளர்களிடையே பேசிய அன்புமணி ராமதாஸ், "கள்ளச்சாராயம் தொடர்பாக சட்டத்தை கொண்டு வந்தால் அதை மதித்து கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டும். நேற்று விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் கிராமத்தில் ஒருவர் கள்ள சாராயத்தால் இறந்துள்ளார். இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிபிசிஐடி மீது எங்களுக்கு மரியாதை உள்ளது. ஆனால் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அரசியல்வாதிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசியல்வாதிகள் யார் யார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா?
அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் விக்கிரவாண்டியில் சூழ்ந்து மக்களுக்கு பணத்தை இறைத்து வருகிறார்கள். விக்கிரவாண்டியில் தேர்தலே நடத்த தேவையில்லை. திமுக வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டு போகலாம். ஆனால், இத்தனையையும் மீறி நாங்கள் தான் வெற்றி பெறப் போகிறோம். நாங்கள் ஜெயலலிதா புகைப்படத்தை பயன்படுத்த கூடாது என சொல்ல யாருக்கும் உரிமையில்லை" என பேசினார்.