மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரியாக மாறி போதைப் பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்!

Anbumani Ramadoss M K Stalin Tamil nadu
By Jiyath Aug 23, 2023 07:48 AM GMT
Report

மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரியாக மாறி போதைப் பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் 

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் 'காவலரை கத்தியுடன் துரத்திய கஞ்சா போதை கும்பல்; தலைவிரித்தாடும் கஞ்சா நடமாட்டத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை! சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் சீருடையில் உள்ள காவலர் ஒருவரை கஞ்சா போதையில் திளைக்கும் மூன்று இளைஞர்கள் கத்தியுடன் துரத்தும் காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரியாக மாறி போதைப் பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்! | Anbumani Ramadoss Request To Cm Mk Stalin

சமூக விரோதிகளை ஒடுக்கி, சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவலரையே கத்தியுடன் துரத்தும் துணிச்சலை கஞ்சா போதை கொடுத்திருக்கிறது. காவலரையே துரத்தும் கஞ்சா போதைக் கும்பல் அப்பாவி மக்களுக்கு எத்தகைய தொல்லைகளைக் கொடுப்பார்கள் என்பதை நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த கஞ்சாவுக்கு அடிமையான மூன்று இளைஞர்கள், அங்கு நடந்த கோயில் திருவிழாவில் திருமாவளவன் என்பவரை கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.

அவர் தெரிவித்த புகாரின் அடிப்படையில் விசாரிக்கச் சென்ற காவலரைத் தான் கஞ்சா கும்பல் கத்தி முனையில் விரட்டியுள்ளது. காட்டுப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை கட்டுப்பாடின்றி நடப்பதும், கஞ்சா புகைத்த கும்பல்கள் கத்தி முனையில் பணம் பறித்தல், பெண்களின் அத்துமீறுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவதும் வாடிக்கையான ஒன்று என விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னைக்கு அருகிலேயே கஞ்சா விற்பனை இந்த அளவுக்கு தலைவிரித்தாடுவதும், அது கட்டுப்படுத்தப்படாததும் கண்டிக்கத்தக்கவையாகும்.

நடவடிக்கை எடுக்க வேண்டும் 

தமிழ்நாட்டில் மிகப்பெரிய சமூகச் சீரழிவையும், சட்டம் -ஒழுங்கு சீர்குலைவையும் கஞ்சா வணிகம் ஏற்படுத்தி வருகிறது; தனிப்பிரிவை அமைத்தாவது அதை தடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முதலமைச்சரிடம் நேரிலும் இதை தெரிவித்திருக்கிறேன்.

மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரியாக மாறி போதைப் பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்! | Anbumani Ramadoss Request To Cm Mk Stalin

தமிழக காவல்துறையும் கஞ்சா வேட்டை 1.0, 2.0, 3.0 என நடத்தி வருகிறது. ஆனாலும், கஞ்சா வணிகம் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது; கஞ்சா போதையில் காவலரையே துரத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது என்றால் காவல்துறையினர் நடத்தும் கஞ்சா வேட்டையால் என்ன பயன் என்று தெரியவில்லை. இந்தியாவில் அதிக இளைஞர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. இது நமக்கு பெருமையளிக்கும் விஷயமாகும்.

ஆனால், மக்கள்தொகையில் லாபப்பங்காக (Demographic dividend) திகழ வேண்டிய இளைஞர் சமுதாயம் மதுவுக்கும், கஞ்சாவுக்கும் அடிமையாக சீரழிவதை பொறுப்புள்ள தலைவராக சகித்துக் கொள்ள முடியவில்லை. இளைஞர் சமுதாயம் காக்கப்பட வேண்டுமானால் கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப்பொருட்களும் ஒழிக்கப்பட வேண்டும்.

அண்மையில் நடைபெற்ற ’’போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’’ என்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைபொருட்கள் ஒழிப்பில் சர்வாதிகாரியாக செயல்படுவேன் என்று கூறினார். அவர் உண்மையாகவே சர்வாதிகாரியாக மாறி கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.