60 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் - தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு
60 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் தவெக அரசில் உள்ளதாக அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
60 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் புதிய அணை கட்ட திட்டமிடும் கர்நாடக மாநில அரசின் முயற்சிக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடக அரசு இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை காவிரி நீர்ப்பாசன பகுதிகளில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே இன்று சென்னை தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தை, அன்புமணி ராமதாஸ் சந்தித்து மேகதாது விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், "தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட வேண்டிய நீர்த்திட்டங்கள், அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் மற்றும் நீர்வள மேலாண்மை தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை அரசுக்கு வழங்கியுள்ளோம்.
நீர்திட்டங்களுக்கு திமுக அரசு முக்கியத்துவம் தரவில்லை.
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில், எதிர்க்கட்சிகளையும் அழைத்து அவர்களது ஆலோசனைகள் மற்றும் யோசனைகளைக் கேட்டு, அதற்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசாக தவெக அரசு உள்ளது. இதனை மிகப்பெரிய மாற்றமாக பார்க்கிறேன். இதற்காக இந்த அரசை பாராட்டுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நீர்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.