அன்புமணியை கண்ணீருடன் கட்டியணைத்த ராமதாஸ் - பாமகவில் முடிவுக்கு வந்த மோதல்
ராமதாஸ் மற்றும் அன்புமணி சந்தித்துள்ள நிலையில், கட்சியில் இருந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு
2024 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த பாமக பொதுக்குழுவில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே வெளிப்படையான மோதல் வெடித்தது.

இதனை தொடர்ந்து இருவரும் தனி தனி அணிகளாக செயல்பட்டு வந்த நிலையில், பாமக யாருக்கு சொந்தம், கட்சியின் சின்னம் யாருக்கு என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் அன்புமணி தலைமையிலான பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ராமதாஸ் சசிகலாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.
இந்நிலையில், தற்போது இருவருக்குமிடையேயான மோதல் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
இன்று ராமதாஸின் 61வது திருமண நாளை முன்னிட்டு அவரை தைலாபுரம் தோட்டத்தில் உள்ள இல்லத்திற்கு அன்புமணி ராமதாஸ் அவரது மனைவி சௌமியா அன்புமணி மற்றும் மகள்களுடன் சென்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, ராமதாஸ் அன்புமணியை கண்ணீர் மல்க கட்டி தழுவி வரவேற்றார். இதன் பின்னர், அன்புமணி ராமதாஸ் பெற்றோரிடம் ஆசீர்வாதம் பெற்றார்.
முடிவுக்கு வந்த உட்கட்சி மோதல்
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இனிமேல் எல்லாம் நல்லதே நடக்கும் என தெரிவித்துள்ளார்.

18 மாதங்களுக்கு பின்னர் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, சமூகநீதி கணக்கெடுப்புக்காக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியதையும், விவசாயிகள் பிரச்சனைக்காக அனைத்து விவசாய சங்கங்களையும் அழைத்ததையும் சொல்லி நான் செய்ய நினைத்ததையெல்லாம் நீ செய்கிறாய் என ராமதாஸ் அன்புமணியை வாழ்த்தியுள்ளார்.
மேலும், இனி தான் உடல்நலனில் கவனம் செலுத்தப்போவதாகவும், கட்சி மற்றும் பிற அமைப்புகளை நீ கவனித்து கொள் என ராமதாஸ் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.