தலைவராகும் அன்புமணி ராமதாஸ், அடுத்த கட்ட நகர்வு என்ன ?

By Irumporai May 28, 2022 06:51 AM GMT
Report

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அன்புமணி ராமதாஸ்.

சென்னையை அடுத்த திருவேற்காடு ஜி.பி.என். பேலஸ் திருமண அரங்கத்தில் பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை 11.00 மணிக்கு தொடங்கியது.

சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமை ஏற்க, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு அணிகளின் அனைத்து நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.   

இந்நிலையில் திருவேற்காட்டில் இன்று நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணியை தலைவராக முன்மொழிந்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளாக பாமக தலைவராக இருந்த ஜி.கே.மணி பாமக சட்டமன்ற கட்சி தலைவராக தொடர்வார் என்று தெரிகிறது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "பா.ம.கவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.