ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிப்பது என்ன நியாயம்? அன்புமணி ஆவேசம்

Stalin Tasmac Anbumani Ramadoss
By mohanelango Jun 15, 2021 07:06 AM GMT
Report

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதனால் மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கொரோனா பாதிப்புகள் மெல்ல மெல்ல குறைந்து வந்ததால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி கடந்த 14-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன.

இதற்கு பல தரப்பினரும் எதிர்த்து தெரிவித்திருந்த நிலையில் கள்ள மதுபானம் அதிகரித்துவிடக்கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகளை திறந்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், “தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் 165 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் நான்கில் மூன்று பங்கு கடைகள் தான் திறந்துள்ளன என்றாலும் வணிகம் மட்டும் கிட்டத்தட்ட இரு மடங்கு நடந்திருக்கிறது. அந்த அளவுக்கு மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வைத்துள்ளது அரசு 

கொரோனா நிதியுதவியாக ரூ.4200 கோடியை இந்த மாதத்தில் தமிழக அரசு வழங்கவுள்ளது. ஆனால், தினசரி 165 கோடிக்கு மது விற்றால் ஒரு மாதத்தில் ரூ.5000 கோடியை மக்களிடமிருந்து மதுவைக் கொடுத்து அரசு பறித்துக்கொள்ளும். ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிப்பது என்ன நியாயம்? 

மக்கள் நோயின்றி, குடும்பத் தகராறுகள் இல்லாமல் வாழ மிகச்சிறந்த வழி மதுக்கடைகளை மூடுவது தான். அதனால் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.