"திமுகவின் சாயம் வெளுத்து விட்டது" - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க தற்போது வாய்ப்பு இல்லை என்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறிய கருத்துக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை கடுமையாக உயர்த்தியுள்ளதால் பெட்ரோல், டீசல் விலையில் மாநில வரியைக் குறைப்பது தற்போதைக்கு சாத்தியமில்லை என தெரிவித்தார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறியிருப்பதன் மூலம் ஆட்சிப் பொறுப்பேற்ற 50 நாட்களுக்குள்ளாகவே திமுகவின் சாயம் வெளுத்து விட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் வாக்குறுதியின் போது சாத்தியமான விலைக்குறைப்பு இப்போது சாத்தியமாகாதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு கலால் வரியை உயர்த்தினாலும், குறைத்தாலும் அதன் பாதிப்பும், பயனும் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தான் கிடைக்கும்.
இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைத்தால் அது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் எனவும் அன்புமணி ராமதாஸ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.