பதவியில் இருந்து உடனே நீக்குங்க - அன்புமணி சபாநாயகருக்கு பரபரப்பு கடிதம்
சபாநாயகருக்கு அன்பிமணி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அருள் நீக்கம்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் வலுத்து வருகிறது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், தான் தான் தலைவர் என அறிவித்தார்.
இதனையடுத்து நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டிலும் இருவருக்கும் இடையிலான மோதல் வெளிப்பட்டது. ஜூலை 10, 2025 அன்று கும்பகோணத்தில் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த மோதலால் ராமதாஸ் ஆதரவாளராக இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணி அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் அன்புமணிக்கு நிர்வாகிகளை நீக்க அதிகாரம் இல்லை. பாமக கொறடாவாக அருள் உள்ளார். ஜி.கே.மணி மூலம் கடிதம் கொடுத்த பிறகுதான் நீக்க முடியும் என ராமதாஸ் தெரிவித்தார்.
அன்புமணி கடிதம்
இந்நிலையில், சபாநாயகருக்கு அன்புமணி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொறடாவாக செயல்பட்டு வந்த சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. அருள் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும்,
கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப் பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய கொறடாவாக மயிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. சி.சிவக்குமார்
அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆவணங்களில் இந்த மாற்றத்தை பதிவு செய்து, உரிய ஆணைகளை பிறப்பிக்க வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.