மருத்துவமனையில் ராமதாஸ் - உடல்நிலை குறித்து அன்புமணி விளக்கம்
ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து அன்புமணி ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
மருத்துவமனையில் ராமதாஸ்
பாமக நிறுவனரான ராமதாஸ் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று மருத்துவர் செங்குட்டுவவேல் தலைமையிலான மருத்துவக்குழுவினர், அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது ராமதாஸ் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இன்று காலை அவரது மகன் அன்புமணி ராமதாஸ் அவரை நலம் விசாரிக்க மருத்துவமனை வந்தார்.
அன்புமணி ராமதாஸ் விளக்கம்
இது குறித்து பேசிய அவர், "மருத்துவர் ராமதாஸ் ஐசியூவில் இருப்பதால் அவரை நேரில் சந்திக்க முடியவில்லை. இன்னும் 6 மணி நேரம் ஐசியூவில் இருப்பார்.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் பேசினேன். இன்று காலை ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் நன்றாக உள்ளது.
ஐயாவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை. 2 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
உட்கட்சி மோதல் காரணமாக இருவரும் நீண்ட நாட்களாக சந்திக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது தந்தையை நலம் விசாரிக்க அன்புமணி ராமதாஸ் மருத்துவமனை வந்துள்ளார்.