அன்புமணியே தலைவராக தொடர்வார் - ராமதாஸ்-க்காக மேடையில் போடப்பட்ட இருக்கை!
அன்புமணியே தலைவராக தொடர்வார் என பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுக்குழுக் கூட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும் கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான மோதல்போக்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதனால், கடந்த சில நாட்களாக பாமக இரண்டு அணிகளாக உள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் உள்ள சங்கமித்ரா திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 17 காலை 10 மணிக்கு அக்கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி (இன்று) காலை 11 மணியளவில் மகாபலிபுரத்திலுள்ள அரங்கத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க ராமதாஸுக்கு அன்புமணி அழைப்பு விடுத்த நிலையில், பேனரில் ராமதாஸின் புகைப்படம் இடம்பெற்றது.
19 தீர்மானங்கள்
அவருக்காக மேடையில் போடப்பட்ட இருக்கையும் காலியாகவே இருந்தது. தொடர்ந்து பாமக உட்கட்சி தேர்தல் நடைபெறும் வரை அன்புமணியே பாமக தலைவராக தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வன்னியர்களுக்கு விரைவில் இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் விடுதலை நாள் அறிவிப்பாக தமிழக அரசு வெளியிட வேண்டும். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே பாட்டாளி மக்கள் கட்சியின் இலக்காகும். தமிழ்நாட்டில் நான்கு முறை உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.