காவல்துறையினர் கண்முன் நடந்த படுகொலை.. சட்டம் - ஒழுங்கு எங்கே போய்விட்டது? அன்புமணி கேள்வி!
காவல்துறையினர் கண்முன் நடந்த படுகொலை நடந்துள்ளது தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எங்கே போய்விட்டது?என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
படுகொலை
திருநெல்வேலி நகரின் மையப் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாயாண்டி என்ற இளைஞர் பட்டப்பகலில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
நீதிமன்ற வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களையும் மீறி இந்தப் படுகொலை நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் வரும் அனைவரும் தீவிர ஆய்வுக்குப் பிறகே அனுமதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.
ஆனால், காவல்துறையின் சோதனையையும் மீறி கொலையாளிகள் ஆயுதங்களுடன் உள்ளே வந்தது எப்படி? அப்படியானால், காவல்துறையினர் கவனக்குறைவாக இருந்தார்களா? அல்லது கொலையாளிகள் ஆயுதங்களுடன் உள்ளே நுழைவதை காவல்துறையினரே கண்டும் காணாமலும் விட்டுவிட்டார்களா? என்ற ஐயங்கள் எழுகின்றன.
இவை அனைத்திற்கும் தமிழக காவல்துறையும், அரசும் விளக்கம் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை மாதங்களில் மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவரை சரமாரியாக வெட்டியது, பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது, நீதிமன்றத்திற்குள் நுழைந்து விசாரணைக்கு வந்தவரை படுகொலை
சட்டம் - ஒழுங்கு
செய்தது என கொடூர நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு நிகழ்வின் போதும் முன்பகை காரணமாகவே இத்தகைய நிகழ்வுகள் நடப்பதாகக் கூறி காவல்துறையின் தோல்வியை நியாயப்படுத்தும் வகையில் தான் தமிழக அரசு பதிலளிக்கிறதே தவிர, சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காவல்துறையின் அலட்சிய அணுகுமுறை கண்டிக்கத்தக்கது. நெல்லை நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்கு வந்தவரை கொலை செய்தவர்களை கைது செய்துவிட்டோம் என்று காவல்துறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையினர் முன்னிலையில் படுகொலை நடைபெற்றிருக்கிறது.
அதைத் தடுக்க தவறிய காவல்துறையினர், கொலை நடந்த பிறகு கொலையாளியைப் பிடிப்பது ஒன்றும் சாதனையல்ல. கொலையைத் தடுக்கத் தவறியது காவல்துறையின் படுதோல்வி. அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.