தமிழக அரசு இந்த திட்டத்திற்கு ஆதரவளிப்பதன் மர்மம் என்ன? மத்திய அரசுக்கு எதிரான அன்புமணி!
கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கிள்ளியூரையடுத்த கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் 1144 ஏக்கர் பரப்பளவில் இந்த சுரங்கம் அமைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்படவுள்ள கிள்ளியூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிக அளவில் அணுக்கதிர்வீச்சு நிலவும் பகுதிகள் ஆகும்.
மணவாளக்குறிச்சி பகுதியில் இயங்கும் இந்திய அருமணல் ஆலையால் ஏற்படும் கதிர்வீச்சு காரணமாக அங்குள்ள மக்கள், புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தோல்நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
அண்மைக் காலங்களில் இந்த வகை பாதிப்புகள் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்துள்ளன. இந்தநிலையில் அங்கு அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால், அங்குள்ள மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும்.
அனுமதிக்கக் கூடாது
அணுக்கதிர்வீச்சு தொடர்பான தீயவிளைவுகளும் ஏற்படும். இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்திருந்தும் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது மன்னிக்க முடியாதது.
மத்திய அரசின் திட்டங்கள் என்றாலே கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கும் தமிழக அரசு, இத்திட்டத்திற்கு மட்டும் முந்திக் கொண்டு ஆதரவளிப்பதன் மர்மம் என்ன? தென் மாவட்ட மக்கள் மீதான திமுக அரசின் அக்கறை இவ்வளவு தானா?தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் தீங்கை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.
கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இத்திட்டத்திற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்வதுடன், சுற்றுச்சூழல் அனுமதிக்காக நடத்தப்படவிருக்கும் கருத்துக்கேட்புக் கூட்டத்தையும் நிரந்தரமாக கைவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.