மகளிர் ஹாக்கி அணிக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய அன்புமணி ராமதாஸ்..!
இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பாமக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் மகளிர் ஹாக்கி பிரிவில் நேற்று நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியிடம் தோல்வி அடைந்ததை எண்ணி இந்திய வீராங்கனைகள் கண்ணீர் விட்டு கலங்கியது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் வேதனையில் ஆழ்த்தியது.
ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி வரலாற்றில் இந்திய அணி அரைஇறுதி போட்டிக்கு தகுதிபெறுவது இதுவே முதல்முறை ஆகும். இந்திய அணியை பொறுத்தவரை இது மிகப்பெரிய சாதனை தான். இந்த சாதனையை படைப்பதற்கு இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் அனுபவித்த வலியும், வேதனையும் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்காது.
இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் நெருக்கடியான சூழலில் போதிய வசதிகள் இல்லாத உள்ளூர் மைதானங்களில் தான் பயிற்சி பெற்றனர். இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு மிகப்பெரிய அளவில் ஒலிம்பிக் அனுபவம் இல்லை. இதுவரை இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமே இந்திய மகளிர் ஹாக்கி அணி பங்கேற்றிருக்கிறது. இதுதான் அவர்களின் மூன்றாவது ஒலிம்பிக் போட்டி ஆகும்.
அதேசமயம் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள 16 வீராங்கனைகளில் 8 பேருக்கு இதுதான் முதல் ஒலிம்பிக் போட்டியாகும். இந்நிலையில் இன்றைய போட்டியில் தோற்றதற்காக கண்ணீர் விட்ட நீங்கள் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று ஆனந்த கண்ணீர் விடப்போவதை இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது.
அதற்காக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இப்போதே எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணியினரின் போர்க்குணமிக்க ஆட்டத்தை பாராட்டும் வகையில் இந்திய அணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.