இந்தி 56 மொழிகளை அழித்துள்ளது - மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதில்

Shri Dharmendra Pradhan Anbil Mahesh Poyyamozhi
By Karthikraja Feb 21, 2025 01:30 PM GMT
Report

தேசிய கல்விக் கொள்கையால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மும்மொழி கொள்கை

தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள நிலையில், மத்திய அரசின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைந்தால் மட்டுமே நிதி வழங்கப்படும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 

தர்மேந்திர பிரதான்

இந்த திட்டத்தில் இணைந்தால் தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான மும்மொழி கொள்கையை அமல்படுத்த நேரிடும், இது மறைமுக ஹிந்தி திணிப்பு. தமிழ்நாட்டில், இரு மொழி கொள்கை தான் இருக்கும் என தமிழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ரூ.5000 கோடி நிதி இழப்பு

தமிழ்நாட்டில், பாஜக தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கல்வி நிதியை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று(21.02.2025) பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

இதற்கு இன்று பதில் கடிதம் எழுதியுள்ள ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "புதிய கல்விக்கொள்கையில் தமிழக அரசின் பார்வையில் குறைபாடு உள்ளது. இந்த விஷயத்தை அரசியல் ஆக்க வேண்டாம். ஏதேனும் ஒரு மொழியை படிக்கச் வேண்டும் என்பதுதான் அதன் சாராம்சம். 

இதில் ஹிந்தி திணிப்பு என்பது எந்த மாநிலத்திற்கும் இல்லை. பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கும் காரணத்தால், தமிழ்நாடு அரசு ரூ.2500 கோடியை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக ரூ.5000 கோடி நிதியை இழக்கிறது." என தெரிவித்துள்ளார்.

இடைநிற்றலை அதிகரிக்கும்

இந்நிலையில் இது தொடர்பாக இன்று(21.02.2025) திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "PM Shri பள்ளித் திட்டமாக தேசிய கல்விக் கொள்கையைக் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கொண்டு வருவது போன்ற செயல்கள் மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும்.

தமிழக அரசு தரமான கல்வியைத்தான் வழங்கி வருகிறது. இந்தியாவிலேயே, அதிகளவில் கல்வி இடைநிற்றல் இல்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றி வருகிறோம். இருமொழி கொள்கையைப் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கல்வியில் சாதனை படைத்து வருகிறோம். 

அன்பில் மகேஷ்

ஒன்றிய அமைச்சர் எழுதிய கடிதத்தில், தமிழின் பெருமையை நாங்களும் முன்னெடுத்து வருகிறோம். பிரதமரும் பல்வேறு முன்னெடுப்புகளையும் செய்து வருகிறார் என்று பல்வேறு செய்திகளை கூறியிருக்கிறார். இறுதியில், மத்திய அரசின் கோரிக்கையை ஒப்புக்கொண்டு கையெழுத்திடுங்கள்.

56 மொழிகள் அழிக்கப்பட்டுள்ளது

இளைய சமூகத்தை மனதில் வைத்து இதை வடிவமைத்திருக்கிறோம் என கூறியிருக்கிறார். இளைய சமூகத்தை மனதில் வைத்து இதை செய்திருந்தால், அதற்கென நிபந்தனைகளை விதிக்கக்கூடாது. புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும் முன்பாக, இந்தியாவில் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலத்தின் சார்பில் ஒரு பிரதிநிதியை அழைத்து கலந்தாலோசித்திருந்தால், சரியாக இருந்திருக்கும். ஆனால், இதை எதையும் செய்யாமல், அவர்களாகவே ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம். மருத்துவர்கள், தொழில்நுட்பம், இஸ்ரோ, ஐடி என பல்வேறு துறைகளிலும் இருமொழிக் கொள்கையின் கீழ் படித்தவர்களே முதன்மையாக இருக்கிறார்கள். மும்மொழிக் கொள்கை மாணவர்களிடையே அறிவாற்றல் சுமையை உருவாக்கும்.

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சொந்த மொழியான ஒரியா மொழி உட்பட 56 மொழிகள் முழுமையாக இந்தி திணிப்பால் அழிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற நிலை தமிழுக்கும் வந்துவிடக் கூடாது. மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்ட மாநிலத்தின் அதிகாரிகளே, மத்திய அரசின் மூலம் இந்தியைத் திணிப்பார்கள் என்று கூறுகின்றனர்" என பேசினார்.