3 பேர் கொண்ட குழு அமைப்பு...போராட்டத்தை கைவிட வேண்டும்..அன்பில் மகேஷ் வேண்டுகோள்
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஆசிரியர்கள் போராட்டம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை(DPI) வளாகத்தில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் என மூன்றுவகையான ஆசியர்கள் சங்கத்தினர் வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் குடும்பத்தினருடன் போராடி வருகின்றனர்.
குறிப்பாக, இடைநிலை பதிவு ஆசிரியர்களைப் பொறுத்தவரையில், `ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் - சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும்' எனக்கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அன்பில் மகேஷ் வேண்டுகோள்
இந்நிலையில், இன்று மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்த போது, 12500 பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியம் 10000 முதல் 12500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது என்று தகவல் அளித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்த விவகாரத்தில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த குழு ஆசிரியர்களின் கோரிக்கையில் ஆய்வினை நடத்தி தங்களது அறிக்கையை மாதத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்கும் என்றும் அதன் பிறகு இதில் முடிவெடுக்கப்படும் என்றார். மேலும், ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.